இதயத்தின் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் தவக்காலம்
தவக்காலப் பயணம் நம்மை இதயத்தின் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்கின்றது, உயிர்ப்பின் மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்கின்றது என்றும், தூய்மைப்படுத்துதலின் காலம் ஆன்மிகப் புதுப்பித்தலின் காலம், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் பிறரன்புப் பணிகளில் வளர்வதற்கான காலம் இத்தவக்காலம் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை தவக்காலத்தின் முதல் வாரத்தை முன்னிட்டு மூவேளை செப உரையினை முன்னதாகவே தயாரித்து திருப்பீடத்தகவல் தொடர்பகத்திற்கு வழங்கியுள்ள எழுத்துவடிவப் படிவத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் சிறப்பிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலியினை தனது மூவேளை செப உரைக்கருத்தில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், நாம் வாழ்கின்ற சமூகம், சந்தைக் கருத்தியல்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது என்றும், தனிநபர் இலாபம் மற்றும் பலன்களை எதிர்பார்த்துப் பணியாற்றும் இச்சமூகத்தில் தன்னார்வலர்களின் பணியானது எதிர்நோக்கின் அடையாளமாகப்வும், இறைவாக்காகவும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இறைவாக்கினர்களாக இருக்கும் தன்னார்வலர்கள் தங்களது பிறரன்புப் பணியினால் மிகவும் தேவையிலிருப்பவர்களுக்கு ஒன்றிப்பையும் பணியையும் இலவசமாகவும் முதன்மையாகவும் வழங்குகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.