ஆசியாவில் கிறிஸ்தவர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டுள்ளன
மனிதகுல ஒட்டுமொத்த மனச்சான்றின் காயத்தில் இன்னும் வலியை வழங்கிக் கொண்டிருப்பதாக, இவ்வுலகில் நடந்த அணு குண்டு தாக்குதல் உள்ளது என கவலையை வெளியிட்டார் கர்தினால் சார்லஸ் போ.
இச்செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாட்டிற்கு திருத்தூதுப் பயணத்தை துவங்குவதை முன்னிட்டு ZENIT செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் போ அவர்கள், இக்காலத்தில் ஆசிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கொடுமைகளை அனுபவிப்பது தொடர்கின்றது என எடுத்துரைத்தார்.
இன்றைய ஆசியச் சூழல்களில் கிறிஸ்தவர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு உள்ளன என்பது குறித்து, அனைத்துலக சமுதாயத்தின் கவனம் ஈர்க்கப்படவில்லை என்ற கவலையையும் வெளியிட்ட மியான்மார் கர்தினால் போ அவர்கள், இதையெல்லாம் தாண்டி நம்பிக்கையின் அடையாளங்களும் ஆசிய கிறிஸ்தவர்களின் மத்தியில் காணப்படுகின்றன எனவும் கூறினார்.
ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில், அணுகுண்டு தாக்குதல்களின் விளைவுகளைப் பார்த்த பின்னரும், ஆசிய நாடுகளின் அணுஆயுத மோகம் மறையவில்லை என்ற வருத்தத்தையும் வெளியிட்ட கர்தினால் போ அவர்கள், திருத்தந்தையின் இத்திருப்பயணம் அணு ஆயுதம் குறித்த புதிய புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும் என, தான் நம்புவதாகவும் கூறினார்.
Comments are closed.