மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழா
இன்று திருச்சபையானது அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதைக் குறித்த செய்திகள் விவிலியத்தில் இல்லாவிட்டாலும்கூட திருச்சபை மரபுகளில், குறிப்பாக யாக்கோபு நற்செய்தியில் இதைப் பற்றி தெளிவான கருத்துகள் இருக்கின்றன.
மரியாளின் பெற்றோர்களான சுவக்கீன், அன்னமாள் இவர்களுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையில்லை. ஆனாலும் அவர்கள் கடவுள்மீது கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையினால் தொடர்ந்து இறைவனிடம் மன்றாடி வந்தார்கள். அவர்களுடைய ஜெபத்திற்கு இறைவன் ஒருநாள் பதிலளித்தார். ஆம், கடவுள் அவர்களுடைய முதிர்ந்த வயதில் மரியாவைக் குழந்தையாகத் தந்தார்.
கடவுள் தங்களுக்கு இந்த முதிர்ந்த வயதில் குழந்தைப் பாக்கியம் தந்ததை நினைத்து அவர்கள் மரியாவை கோவிலிலே காணிக்கையாக ஒப்புக்கொடுகிறார்கள். மரியாள் இளம்பெண் ஆகும்வரை அங்கேயே இருந்து பணிசெய்தாள். இதுதான் யாக்கோபின் நற்செய்தி என்ற அந்த நூலிலே காணக்கிடக்கிறது.
கி.பி.543 ஆம் ஆண்டு முதலாம் ஐன்ஸ்டீனியன் என்ற மன்னன் எருசலேம் திருக்கோவிலுக்கு அருகே இன்னொரு கோவில் சிதைந்து இருப்பதை கண்டான். அதனை அவன் சீரமைத்து மரியாளுக்கு ஒப்புக்கொடுத்தான். கி.பி. 1585 ஆம் ஆண்டு அன்று திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் சிக்தூஸ் என்பவர் இவ்விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். இவ்வாறு மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இந்த விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்களின் வழியாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பாடல் என்பது இறைவனுக்கு முற்றிலும் நம்மையே நாம் ஒப்புக்கொடுப்பது; கலாத்தியார் 2:20 ல் பவுலடியார் கூறுவது போல, “வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்ற மனப்பான்மையில் வாழ்வது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் ஒரு அடிமை போன்று ஆண்டவருக்காகவே வாழ்வது.
மரியாள் கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் “என்னுடைய விருப்பம் அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்று இறைத்திட்டத்தின் படி வாழ்கின்றார். அதற்காக எப்படிப்பட்ட இன்னலையும் சந்திக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “யார் என்னுடைய தாய், சகோதரர்கள்?” என்று கேட்டுவிட்டுச் சொல்வார், “விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் திருவுளப்படி நடப்பவரே என்னுடைய தாயும், சகோதர சகோதரிகளும் ஆவார்” என்கிறார். அந்தவகையில் மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்லாமல், இறைத்திருவுளத்தின்படி நடந்ததனாலும் இயேசுவுக்கு தாயாகிறார்.
இறைத்திருவுளத்தின்படி நடத்தல் என்றால் என்ன? இறைவனின் விரும்பம் என்ன என்பதை அறிந்து, அவருக்கு மட்டுமே பணிசெய்து வாழ்வதுதான் இறைத்திட்டதின் படி நடப்பதாகும்.
தில்லியிலே ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பாக சூஃபி ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகச்சிறந்த கவிஞர், பாடகரும்கூட. மக்கள் அவருடைய கவிதையைக் கேட்டு மெய்மறந்து நிற்பார்கள். அந்தளவுக்கு திறமையானவர். ஒருநாள் ஞானியைப் பற்றி கேள்விப்படும் அரசன், அவரிடம் சென்று, “என்னைப் பற்றி கவிதை பாடினால் உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்” என்றான். அதற்கு அந்த ஞானி, “ஆண்டவனைப் பாடல் பாடும் இந்த நாவால் அற்ப மானிடப் பதராகிய உன்னைப் பற்றியெல்லாம் பாட முடியாது” என்று சொல்லி மறுத்துவிட்டார்.
உடனே அரசன் தன்னுடைய உடைவாளை எடுத்த சூஃபி ஞானியின் தலையை ஒரு சீவு சீவினான். தலை கீழே தரையில் விழுந்தது. ஆனாலும் உடலில் இருந்த பலத்தால் அந்த ஞானி கீழே கிடந்த தன்னுடைய தலையை எடுத்துக்கொண்டு தான் வாழும் கோவிலுக்குச் சென்று அங்கே மரித்தார் என்பது ஒரு நிகழ்வு. மக்கள் இன்றைக்கும் அவருடைய கல்லறைக்குச் சென்று வணங்கிவிட்டு வருகிறார்கள்.
ஆண்டவனுக்கு மட்டுமே அடிபணிவேன், வேறு யாருக்கும் அல்ல” என்று சொல்லி தன்னுடைய இன்னுயிரை ஈந்த அந்த சூஃபி ஞானியின் செயல் பாராட்டுக்குரியது.
இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும், மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் மரியாவைப் போன்று இறைவனுக்கு மட்டுமே பணிசெய்வேன், அவரது திட்டத்தின் படி மட்டுமே நடப்பேன் என்று உறுதி ஏற்போம். அதன்விழியாக இறையருள் பெறுவோம்.
மரியாள் பயணமாகும் திருச்சபை என்ற ஓடத்தை விண்ணகம் என்ற துறைமுகத்திற்குள் கூட்டிச் சேர்பவள் – புனித ஜெர்மானுஸ்.
Comments are closed.