நவம்பர் 17 : நற்செய்தி வாசகம்

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19

அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.

இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்’ என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.

ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும்.

ஆனால் உடனே முடிவு வராது” என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.

இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————

பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு

I மலாக்கி 4: 1-2a

II 2 தெசலோனிக்கர் 3: 7-12

III லூக்கா 21: 5-19

‘இறுதிவரை மனவுறுதியோடு இரு’

நிகழ்வு

கொரியாவில் ஜூன்-கோன் கிம் (Joon-Gon Kim) என்றொரு கிறிஸ்தவத் தலைவர் இருந்தார். கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த அவர், கிறிஸ்துவைக் குறித்து மக்களிடம் மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார். நாள்கள் செல்லச் செல்ல, ஜூன்-கோன் கிம் மட்டுமல்லாது, அவருடைய தந்தையும் அவருடைய மனைவியும் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை மக்கட்கு அறிவிக்கத் தொடங்கினார்கள்.

இது அங்கிருந்த கம்யூனிஸ்ட்கட்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அவர்கள் ஜூன்-கோன் கிம்மிடமும் அவருடைய தந்தையிடமும் மனைவியிடமும் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை யாருக்கும் அறிவிக்கக்கூடாது… மீறினால் கொலைசெய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள். அவர்கள் அதற்கெல்லாம் அஞ்சாமல் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை மக்கட்குத் தொடர்ந்து அறிவித்து வந்தார்கள். ஒருநாள் ஜூன்-கோன் கிம்மின் தந்தையும் அவருடைய மனைவியும் ஒரு பொது இடத்தில் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த கம்யூனிஸ்டுகள், அவர்கள் இருவரையும் அடித்தே கொன்றார்கள்; அதைப் பார்த்துவிட்டுக் கூட்டம் சிதறி ஓடியது. செய்தி அறிந்த ஜூன்-கோன் கிம் மிகுந்த வேதனை அடைந்தார். ‘தன்னுடைய தந்தையையும் மனைவியையும் கயவர்கள் இப்படிக் கொன்றுபோட்டுவிட்டார்களே’ என்று அவர் அவர்களைப் பழித்துரைத்துக் கொண்டிருக்காமல், அவர்களை மனதார மன்னித்தார். மட்டுமல்லாமல், அவர்கள் மனமாற்றம் பெறவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடிவந்தார்.

இதற்குப் பின்பு அவர் புதிய உத்வேகத்துடன் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருந்த தருணத்தில், ஒருநாள் அவர் நற்செய்தியை அறிவித்துவிட்டு, தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, முன்பு அவருடைய தந்தையையும் மனைவியும் கொன்றுபோட்ட அதே கயவர்கள் அவர்மீது பாய்ந்து, அவரை அடித்துக் குற்றுயிராய்ப் போட்டுவிட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் தற்செயலாக அங்கு வந்த ஜூன்-கோன் கிம்மிற்கு அறிமுகமான ஒருவர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று, காப்பாற்றினார். இந்தக் கொடிய நிகழ்விற்குப் பிறகு ஜூன்-கோன் கிம்மிற்குத் தெரிந்தவர்களெல்லாம், அவரிடம் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தி அறிவிப்பதை விட்டுவிடுமாறு கெஞ்சிக்கேட்டார்கள். அவரோ, “நற்செய்தி அறிவிப்பது என்னுடைய கடமை. அந்தக் கடமையை என்னுடைய உயிர் உள்ளவரை ஆற்றுவேன்” என்றார்.

Comments are closed.