கடவுள் உங்கள் செபங்களை கேட்டருள்கிறார்
சிறியோராய், வறியோராய், நலிந்தோராய் இருக்கும் நீங்கள், திருஅவையின் செல்வக்குவியல், நீங்கள் திருத்தந்தையின், அன்னை மரியாவின் மற்றும், கடவுளின் இதயத்தில் இருக்கின்றீர்கள் என்று, லூர்து நகரில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ளும் திருப்பயணிகளிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 17, வருகிற ஞாயிறன்று, மூன்றாவது வறியோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, Fratello என்ற கழகம், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் நடத்திவரும் நான்கு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் திருப்பயணிகளிடம், நவம்பர் 15, இவ்வெள்ளியன்று காணொளி வழியாகப் பேசிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
லூர்து நகர் திருத்தலத்தில் நோயாளிகளைப் பராமரிக்கும் திருப்பயணிகளை ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் உங்கள் செபங்களை கேட்டருள்கிறார் என்று கூறினார்.
பிறருக்கு கொடுப்பதற்கு எதுவுமில்லாத நிலையில், எவரும் வறியோராய் இல்லை என்று கூறியுள்ள திருத்தந்தை, அன்பு உலகைக் காப்பாற்றுகிறது, மற்றும், அன்பு பொழியப்படும் பாத்திரங்களாக நாம் இருக்குமாறு கடவுள் விரும்புகிறார் என்றும், இந்த திருத்தலத்தைவிட்டுச் செல்கையில், நம்பிக்கையுடன், உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு கடவுளன்பின் சாட்சிகளாகச் செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இயேசுவே உங்களின் அரும்பொருட்செல்வம் என உலகிற்கு எடுத்துச் சொல்லுங்கள், அன்னை மரியாவுடன் செல்லுங்கள், அந்த அன்னை, கடவுளின் கனிவின் திருத்தூதர்களாக உங்களை மாற்றுவார், திருத்தந்தை உங்களை அன்புகூர்கிறார் மற்றும், உங்களை நம்புகிறார் என்றும், தனது காணொளிச் செய்தியில் பேசியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
‘வறியோர்க்காக வறியோர் திருஅவை’ என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் அழைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக, Fratello கழகம், லூர்து திருத்தலத்தில், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோருக்கு, இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Misericordia et Misera என்ற தன் திருத்தூது மடல் வழியாக, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவில், வறியோர் உலக நாளை அறிவித்தார்.
Comments are closed.