உத்தரிக்கிற ஆண்மாக்கள் வணக்கம் மாதம் 15.11.2019

ஆதலால், பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாய் இருக்கின்றது
–2 மக்கபே -12:46)

நவம்பர்-15

பதினைந்தாம் தேதி

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிரயாசைப்படுவது மகிமையுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற வகையாவது

தியானம்

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்கு மேன்மேலும் பக்தி வரத்தக்கதாக அந்த ஆத்துமாக்களுடைய மகிமை எவ்வளவென்று கொஞ்சமாகிலும் காண்பிக்கவேணும். இந்த மகிமையை அறிவதற்கு முதலில் மனுஷருடைய ஆத்துமம் எதுவென்று அறியவேணும்.சகல உலகங்களை உண்டுபண்ணினவருமாய்ச் சகலத்தையும் அழிக்க வல்லவருமாயிருக்கிற சர்வேசுரன் அந்த ஆத்துமத்தை தமது சாயலாக படைத்ததன்றியே அந்த ஆத்துமம் தமக்குண்டான சகல நன்மைகளையும் அளவின்றி முடிவின்றித் தம்மிடத்திலே அநுபவிக்கும்படியாய் உண்டு பண்ணினார்.

சூரியன் சந்திரன் நவக்கிரகங்கள் முதலான சகல நட்சத்திரங்களையும் பூமண்டலத்திலுள்ள சகலத்தையும் மனுஷனுக்காகத்தானே சர்வேசுரன் படைத்தாரென்கிறதினாலே எல்லாவற்றுக்கும் மேலான மகிமையை மனுஷன் கொண்டிருக்கிறானென்று சொல்லக் கடவோமல்லவோ? மேலும் மனுஷருடைய ஆத்துமத்தின் மகிமையை அதிகமாய் அறியத்தக்கதாக அந்த ஆத்துமத்தை மீட்க சேசுநாதர் சுவாமி செய்ததையும் பட்டதையும் இன்னும் சற்றுநேரம் யோசிக்கவேணும். சத்தியமாகவே அந்த ஆத்துமத்தை இரட்சிக்க அவர் மெய்யான கடவுளாயிருந்து மனிதனாய்ப் பிறந்து அளவில்லாத பலனுள்ளதாகிய தாம் பட்ட நிந்தை அவமானங்களையும், வாதை வேதனைகளையெல்லாம் அதற்கு விலையாகத் தந்தருளினாரல்லவோ?

மயக்கமுமின்றி, இருளுமின்றி, தெளிந்த காட்சி ஞானமுடையவராகிய சுவாமி இந்தப்படி ஆத்துமத்தை மதித்தபின்பு நாம் அதன் மாட்சிமையைக் காட்ட வேறொரு நியாயம் தேடவேணுமோ? ஆதலால் அளவில்லாத பலனுள்ள தமது பாடுகளை ஓர் ஆத்துமத்துக்கு விலையாக ஆண்டவர் வலிய மனதோடு கொடுத்திருக்க, நாம் அதை மதிக்கத்தக்கதாக அதிகமாய்ச் சொல்லமுடியாது.

மனுஷருடைய ஆத்துமத்தின் மகிமை பொதுப்பிரகாரமாய் அப்படியிருக்க, உத்தரிக்கிற ஆத்துமாக்களுடைய பெருமை அதற்குமேற்பட்டதென்றே சொல்ல வேண்டிய தாகும். அதெப்படியென்றால், ஆத்துமத்தில் இருக்கக் கூடுமான வரங்களுக்குள்ளே இஷ்டப்பிரசாதமானது எல்லாவற்றிலும் உயர்ந்த வரமென்பது நிச்சயம். அந்த ஆத்துமாக்களெல்லாம் இஷ்டப்பிரசாதத்தோடே உயிர்விட்டு, தேவசிநேகத்தில் பிசகக்கூடாமல் நிலைமையைக் கொண்டிருக்கிறார்களல்லவோ? அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக்கடன் தீர்ந்தவுடனே சர்வேசுரனுடனே பிரத்தியகூடிமான தரிசனத்தை அடைந்து, மோட்ச பேரின்ப இராச்சியத்தில் செஞ்சுடைரைப் போல் பிரகாசித்து, இராஜாக்களைப் போல் பிரதாபக் கீரிடம் சூட்டப்பட்டு, சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து என்றென்றைக்கும் வாழ்வார்களென்பது தப்பாத சத்தியமாம்.

இப்படியாகையில் இப்பேர்ப்பட்ட ஆத்துமாக்களுக்காக வேண்டிப் பிரயாசைப்படுவது மகா மகிமையென்றும் சொல்லவேணுமல்லவோ?
மனுஷர் இவ்வுலகத்தில் செய்யத்தகும் தொழில்களுக்குள்ளே குருக்கள் செய்யும் தொழிலே மேலான தொழிலென்று அர்ச் கிறகோரியூசென்னும் பாப்பானவர் சொல்லியிருக்கிறார். அதேதெனில், மற்றத் தொழில்களெல்லாம் அழிந்துபோகிற சரீரத்தைச் சார்ந்த தொழில்களாயிருக்கையில், அழியாத ஆத்துமாக்களை விசாரிக்கும் தொழில் குருக்களுடைய தொழிலாம். சேசுநாதர் சுவாமி செய்த தொழிலும் இந்தத் தொழில்தான். குருக்கள் எல்லோருக்கும் புத்திமதிகளைச் சொல்லி, ஆத்துமம் கெட்டுப்போகாதப்படி பாவத்தை விலக்கவும், புண்ணியத்தைச் செய்யவும் போதித்துக் கொண்டு வருகிறார்கள். மீண்டும் ஆத்துமத்தின் பல அவசரங்களுக்கு ஆண்டவரால் ஸ்தாபிக்கப்பட்ட ஏழு தேவதிரவிய அநுமானங்களையும் அளிக்கிறார்களல்லவோ?

மேலும் சேசுநாதர் சுவாமி அடைந்த மட்டில்லாத பலனுள்ள திவ்விய மரணத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் மோசம் போகாதபடிக்கு, குருக்கள் பலரும் வீடுவாசல் காணிபூமியை விட்டு, சகலத்தையும் துறந்து வருத்தங்களுக்கும் சாவுக்கும் முதலாய் அஞ்சாமல், அன்னிய தேசங்களுக்குப் போய்மிக்க பிரயாசையும் படுகிறார்களன்றோ? ஆயினும் அவர்கள் நினைத்த பலன் சரிவரக் கிடைக்குமோ கிடைக்காதோ சந்தேகம். அதெப்படியென்றல், மனுஷனானவன் இவ்வுலகத்தில் இருக்கும் வரையில் வேண்டும் வேண்டாமென்கிற மனச்சுதந்திரத்தைக் கைக் கொண்டிருக்கிறான் என்கிறதினால், நன்னெறியில் உறுதியாய் நிலைக்கொண்டு மோட்சத்தை அடைவானோ, அல்லது மனங் கெட்டுப் புத்தி மயங்கிப் புண்ணிய வழியைவிட்டு அவலமாய்ச் சாவானோவென்பது தெரியாத காரியமாயிருக்கும்.

Comments are closed.