ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பு கிறிஸ்தவர்களை குறிவைக்கிறது
சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நவம்பர் 11, இத்திங்களன்று நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது, அந்த அமைப்பு, கிறிஸ்தவர்களை குறிவைக்கிறது என்பதற்குத் தெளிவான அடையாளமாக உள்ளது என்று, அலெப்போ இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Georges Abou Khazen அவர்கள் கூறினார்.
இத்தாக்குதல்களில், கிறிஸ்தவ சமுதாயத்தில் பலர் இறந்துள்ளனர், மற்றும் பலர் காயமுற்றுள்ளனர் என்று கூறும் ஆயர் Khazen அவர்கள், தற்போதைய ஆபத்தை இவை தெளிவாகக் காட்டுகின்றன என்று கூறினார்.
சிரியாவின் வடகிழக்கில், குர்த் இனத்தவருக்கு எதிராக துருக்கியர்கள் தாக்குதலை நடத்துவது, 20ம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்தே சித்ரவதைகளையும், படுகொலைகளையும் அனுபவித்துள்ள மக்களின் மோசமான சூழலை மேலும் அதிகரிக்கின்றது என்றும் ஆயர் Khazen அவர்கள் கூறினார்.
அர்மேனிய-கத்தோலிக்க பேராயர்
மேலும், நவம்பர் 11, இத்திங்களன்று நடத்தப்பட்ட வாகன குண்டு வெடிப்பு தாக்குதலில், சிரியாவின் அர்மேனிய-கத்தோலிக்க அருள்பணியாளர் Abraham Hovsep Bedoyan அவர்கள், கொல்லப்பட்டதையடுத்து Aid to the Church in Need பிறரன்பு அமைப்பிடம் பேசிய அலெப்போ அர்மேனிய-கத்தோலிக்க பேராயர் Boutros Marayati அவர்கள், சிரியாவில் இன்னும் போர் முடியவில்லை என்பதை, ஐ.எஸ். இஸ்லாமிய அரசு உணர்த்திக்கொண்டிருக்கின்றது என்று கூறினார்.
சிரியாவின் கிழக்கேயுள்ள Deir Ezzor நகரின் மறைசாட்சிகள் ஆலயத்தில் நடைபெறும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், தனது தந்தை மற்றும், ஒரு திருத்தொண்டருடன், தனது Qamishli பங்குத்தளத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த அருள்பணி Bidoyan அவர்கள் குண்டுவெடிப்பால் உயிரிழந்தார். படுகாயமுற்ற அவரது தந்தையும் உயிரிழந்தார்.
Deir Ezzor நகரில், ஆலயம் மற்றும், கிறிஸ்தவர்களின் வீடுகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் விசுவாசிகள் தங்களின் நகருக்குத் திரும்ப முடியும் என்றும் பேராயர் Marayati அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் இரங்கல் டுவிட்டர்
மேலும், சிரியாவில் இத்திங்களன்று தனது தந்தையுடன் கொல்லப்பட்ட அருள்பணி Abraham Hovsep Bedoyan அவர்களின் அடக்கச்சடங்கில் கூடியிருக்கும் Qamishli அர்மேனிய கத்தோலிக்க பங்கு மக்களுக்கு நெருக்கமாய் உள்ளேன், அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்கள் மற்றும், சிரியாவிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்காகவும் செபிக்கின்றேன் என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்
Comments are closed.