இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
கடும் சித்திரவதைகளுக்கு உட்பட்டு மறைசாட்சியாக மரித்த இன்றைய புனிதர் புனித அகதாவிடமிருந்து மனம் தளரா விசுவாசத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.” என எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் வாசிக்கின்றோம்.
ஆண்டவர் நம்மை தண்டித்துத் திருத்துவது துன்பமாக இருந்தாலும், பிறகு அது மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்பதை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
“பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.” என முதல் வாசகம் கூறுகிறது.
ஆண்டவரைத் தவிர பிறர் மேல் கொள்ளும் அச்சம், விசுவாசத்திற்கு எதிரானது என்பதை உணர இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்.” என வாசிக்கின்றோம்.
நம்பிக்கை இல்லாதவர்களிடமும், நம்பிக்கை இல்லாத இடங்களிலும் அற்புதங்கள் நிகழாது என்பதை உணர்ந்து எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.