இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர்.” என வாசித்தோம்.
பிறந்த இப்புதிய ஆண்டில் நாம் அனைவரும் மனம்மாறி முழுமையாக இறைவார்த்தையின்படி வாழ இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.” என வாசித்தோம்.
நம் ஆண்டவர் திருமுழுக்கு பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் கூட தீய ஆவிகளின் மீதுள்ள அதிகாரத்தை அளித்துள்ளார் என்பதை நாம் உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் “உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.” என வாசித்தோம்.
ஆலயத்தில் மந்திரிக்கப்பட்ட தூய எண்ணெய் நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கவல்லது என முழுமையாக விசுவசிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இந்தியாவில் பிறந்து ஜப்பானில் மறைசாட்சியாக மரித்த இன்றைய புனிதர் புனித கொன்சாலோ கார்ஸியா தன்னை சிலுவையில் அறைந்து கொல்லும்போது உடலைவிட்டு உயிர் நீங்கும்வரை கடவுளின் புகழ்கீதத்தை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார். இப்புனிதரிடமிருந்து நாம் மனஉறுதியை கற்றுக்கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.