இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“இயேசு வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக. அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும்.” என எபிரேயருக்கு எழுதப்பட்டுள்ள திருமுகத்தில் வாசிக்கின்றோம்.

ஆண்டவரை நாள்தோறும் நம் நாவினால் துதிக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.” என திருப்பாடல் 23:4-ல் திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

நமது துன்பக் காலங்களில் நமக்குத் துணையாகவும், ஆறுதலாகவும் நம் இறைவன் நம்மோடு பயணிக்கிறார் என்ற உண்மையை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்பபோம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “தமக்கன்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்

நம்முடைய வாழ்வு சுயநலமிக்கதா? அல்லது பிறரது வாழ்வில் ஒளியேற்றும் அர்த்தமுள்ள வாழ்வா? என சிந்திக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

இயேசுவின் இந்த இறை வார்த்தைகளை வாழ்வாக வாழ்ந்து காட்டிய புனித அருளானந்தரை நாம் வாழ்வின் முன் மாதிரியாகக் கொள்ள இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

தமிழகத்தில் பலர் இறைவனை அறிவதற்கும், கத்தோலிக்கர்களாக மனம் மாறுவதற்கும், தனது இரத்தத்தை இந்த மண்ணில் சிந்தி மறைசாட்சியாக மரித்த புனித அருளானந்தரை இறைத்திட்டத்தின்படி நம் இந்தியாவிற்கு அனுப்பிய எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.