இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் புனித பவுல், “அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை; ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை.” என கூறுகிறார்.

பவுல் கூறியது போல கடவுள் தரும் ஓய்வை, ஆசியைப் பெற அவரிடம் நாம் நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? என்று நாம் சிந்திக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்

“முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.” என வாசிக்கின்றோம்.

பாவத்தில் விழுந்து கிடக்கும் யாராவது ஒருவரை இன்றைய நற்செய்தியில் வரும் நால்வரைப் போன்று இயேசுவிடம் கொண்டு வர நாம் மனமுவந்து முயற்சி எடுக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

‘துறவிகளின் தந்தை’ என அழைக்கப்பட்ட இன்றைய புனிதரான புனித வனத்து அந்தோணியாரை நமது திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.