இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்

“தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள்” என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார்.

நாம் இயேசுவோடும், தந்தையுடனும் இணைந்திருப்பதற்கு இறைவார்த்தை எப்போதும் நம்முடன் நிலைத்திருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றைய நற்செய்தி வாசகத்தில்

“நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என திருமுழுக்கு யோவான் கூறுகிறார்.

இயேசுவின் முன் தன்னையே தாழ்த்திக் கொண்ட திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் தாழ்ச்சி என்னும் உயர்ந்த பண்பினைக் கற்றுக் கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

பிறந்த இப்புதிய வருடத்தில், புதிய மாதத்தில் நம் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியத்தையும், அமைதியையும், அருள் வளங்களையும் இறைவன் அளித்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

திருவிவிலியம் வாசிப்பது, செபமாலை சொல்வது ஆகியவற்றை அனுதினமும் இப்புதிய ஆண்டில் பழக்கமாக்கிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

நமது உள்ளங்களிலும், இல்லங்களிலும் பிறந்த இயேசு பாலன் நமக்கு அருளையும், ஆசீரையும், மீட்பையும் இந்த புதிய ஆண்டில் அளிக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.