அஜாக்சியோ விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

மதங்கள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்று விடைபெற்று, அங்கிருந்து அஜாக்சியோ தலத்திருஅவையின் பாதுகாவலரான அன்னை மரியின் திரு உருவசிலையை நோக்கிப் பயணித்த திருத்தந்தை அவர்கள், அன்னை மரியின் திரு உருவம் முன் மெழுதிரி ஏற்றி சிறிது நேரம் அமைதியில் செபித்தார். அன்னை மரியாவிற்கு புகழ் பாடல்கள் பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புறப்பட்ட திருத்தந்தை அவர்கள், அஜாக்சியோ விண்ணேற்பு அன்னை ஆலயத்தை வந்தடைந்தார்.

அஜாக்சியோ விண்ணேற்பு அன்னை ஆலய முகப்பில் பாடகர் குழுவினர் பாடல்கள் பாடி திருத்தந்தையை வரவேற்க புனித நீர் கொண்டு ஆசீரளித்து ஆலயத்திற்குள் நுழைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சிறுவர் குழாம் திருத்தந்தையை பாடல் பாடி வரவேற்க பாடலின் முடிவில் அச்சிறாரையும் அவர்களை வழிநடத்தியவர்களையும் தனித்தனியாக கரம்குலுக்கி வாழ்த்தினார். உங்களது புன்னகையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள் என்று திருத்தந்தை அக்குழுவினரை வாழ்த்த பிரான்ஸ் நாட்டின் ஆயர் பேரவை தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றார். அதன்பின் அம்மறைமாவட்ட ஆயர்கள் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், குருத்துவ மாணவர்களை சந்தித்து தனது 47 ஆவது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது உரையினை வழங்கினார். திருத்தந்தையின் உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

கடவுளின் இரக்கமுள்ள அன்பின் அடையாளமாகவும், நற்செய்தியின் சாட்சிகளாகவும் இருப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. “நன்றி” என்பதிலிருந்து நான் உடனடியாக கடவுளின் அருளிற்குத் திரும்புகிறேன். ஐரோப்பிய சூழலில்,கிறிஸ்தவ நம்பிக்கையைப் பரப்புவதில் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு ஒருபோதும் பஞ்சமில்லை, ஒவ்வொரு நாளும் நீங்கள் இதை எண்ணி, உங்களை சிறியவர்களாகவும் உடையக்கூடியவர்களாகவும் கண்டுபிடிப்பீர்கள்: நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஆற்றல் வாய்ந்த வழிகள் உங்களிடத்தில் உள்ளன. இத்தகைய வறுமையைக் கடவுளின் வரமாகக் கருதவேண்டும். கிறிஸ்தவப் பணி மனித பலத்தை சார்ந்தது அல்ல, மாறாக அது இறைவனைச் சார்ந்தது. நாம் நம்மை சிறிதளவு அவருக்கு வழங்கும் போது அவர் நம்மை வைத்து பெரிய காரியங்களை ஆற்றுவார். கடவுளை நமது வாழ்வின் முதன்மையாக மையமாக வைத்து செயல்பட வேண்டும். நம்மை அல்ல மாறாக கடவுளை வைத்து நமது நாளின் ஒவ்வொரு செயல்களையும் நாம் செய்ய வேண்டும். “இன்றும் எனது பணியில் நான் அல்ல கடவுளே மையமாக இருக்க வேண்டும் என்ற செபத்தை அடிக்கடி செபிக்கவேண்டும்.

Comments are closed.