கிறிஸ்தவச் சமூகங்கள், தங்கள் உறவுகளை வலுப்படுத்த வேண்டும்
உங்கள் தலத்திருஅவைகளுக்கு இடையேயான பணிகள் மற்றும் ஒருவருக்கொருவர் மீதான ஆதரவு உங்கள் சமூகங்களின் திருத்தூதுப் பணி புதுப்பிப்பை வளர்ப்பது மட்டுமல்லாமல், அவைகளின் சான்று பகர்தல் வழியாக ஒரு நேர்மையான மற்றும் அதிக உடன்பிறந்த உறவுக்கான உலகத்தை உருவாக்க உதவட்டும் என்று கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
பிரான்சின் லூர்து நகரில் இடம்பெறும் அந்நாட்டு ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், பிரான்சு மற்றும் ஆப்பிரிக்க தலத் திருஅவைகளுக்கிடையே உறவை வளர்க்க எடுக்கப்பட்டுள்ள ஆயர்களின் முயற்சியையும் பாராட்டியுள்ளார்.
பேராசை, சுயநலம், அலட்சியம், அரசியல் மற்றும் பொருளாதார நடைமுறைகள் அருங்கேடாக திணிக்கும் சுரண்டல் மனப்பான்மை யாவும் நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளை அடிக்கடி சிதைத்தாலும், கிறிஸ்தவச் சமூகங்கள், அதற்கு மாறாக, தங்கள் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் பரோலின்.
எதிர்காலத்தை நாம் உறுதியாகப் பார்க்க வேண்டும் என்றும், நற்செய்தி அறிவிப்பின் பிரச்சனைகளைத் தொடும் பெரும்பாலான உங்களின் கருப்பொருள்கள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பரோலின்.
கடந்த காலத்தின் வளமை மற்றும் அனுபவங்களில் நீங்கள் வலுவாக இருக்கிறீர்கள் என்றும், சவால்களை எதிர்கொள்ள ஆவியானவர் கொடுத்த அறிகுறிகளை அச்சமின்றி புரிந்து கொள்ளவும், அவர் பரிந்துரைக்கும் மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறீர்கள் என்றும் பாராட்டியுள்ளார் கர்தினால் பரோலின்.
Comments are closed.