நவம்பர் 6 : நற்செய்தி வாசகம்
தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
நிகழ்வு
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சார்ந்தவர் மோக்சேஷ் ஷா. தணிக்கையாளராகத் (Chartered Accountant) தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவருக்கு இவர் எதிர்பார்த்ததைவிடவும் மிகுதியாகவே கையில் பணம் புரளத் தொடங்கியது இது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் இவருடைய தந்தை மும்பையில் நடத்தி JK Corporation என்ற தொழில் நிறுவனத்தின் வழியாகவும் இவருக்கு ஏராளமாகப் பணம் வந்தது. ஏனென்றால், இவர்தான் தன் தந்தை நடத்தி வந்த தொழில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்துவந்தார்.
இப்படி இவருக்குத் தேவைக்கு மிகுதியாகப் பணம் வந்தபொழுதும், தன் வாழ்க்கையில் ஏதோவொன்று குறைவுபடுவதை இவர் உணர்ந்தார். அப்பொழுதுதான் இவருக்குள், ‘நான் ஏன் ஒரு துறவியாகப் போகக்கூடாது?’ என்ற எண்ணமானது உதித்தது. அதன்பிறகு அதாவது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19 ஆம் ஆண்டு இவர் ஒரு சமணத் துறவியானார்.
இவர் சமணத் துறவியான பின்னர் சொன்ன வார்த்தைகள் இவை: “மகிழ்ச்சியான வாழ்விற்கு மிகுதியான பணம் வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் தேவைக்கு மிகுதியாகப் பணம் சேர்த்தேன். அப்படியிருந்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அப்பொழுதுதான் உண்மையான மகிழ்ச்சி பணத்தைச் சேர்ப்பதில் இல்லை; அதை இழப்பதில்தான் இருக்கின்றது என்ற உண்மையைக் கண்டுகொண்டேன். அதனால்தான் ஒரு ஒரு சமணத் துறவியானேன்.”
Comments are closed.