மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி முதல் வாசகத்தில் “நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே.” என கூறப்பட்டுள்ளதை நாம் கேட்டோம்.
சோதிடம், ராசி, நல்ல நேரம், நாள் பார்ப்பது, செல்வத்துக்கு முக்கியத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட அனைவரும் “ஆண்டவர் ஒருவரே” என்ற உண்மையை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தியில்
“உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் நாம் ஆண்டவரை அன்பு செய்கிறோமா? என நாம் சிந்திக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
ஆன்மாக்களின் மாதமான இந்த நவம்பர் மாதம் முழுவதும் நமது இறந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களின் ஆன்மாக்களுக்காக நாம் விஷேசமாக திருப்பலி ஒப்புக்கொடுத்தல், செபமாலை செபித்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல் ஆகியவற்றை அடிக்கடி செய்வதன் மூலம் உத்தரிய நிலையிலிருக்கும் ஆன்மாக்களை ஆண்டவரின் விண்ணக வீட்டிற்கு அனுப்பும் அற்புத பணியினை ஆவலுடன் செய்ய வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்று ஞாயிறு திருப்பலியில் நாம் கேட்கும் இறைவார்த்தைகள் நமக்குள் நல்லதொரு மாற்றத்தினை உருவாக்கிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.