நவம்பர் 4 : நற்செய்தி வாசகம்

நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில்

தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————–

பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொள்ளுங்கள்.

பொதுக் காலத்தின் முப்பத்து ஒன்றாம் வாரம் திங்கட்கிழமை

I பிலிப்பியர் 2: 1-4

II லூக்கா 14: 12-14

“பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொள்ளுங்கள்”

புதிதாய்ப் பிறந்த இராணுவ அதிகாரி:

ஒரு காலத்தில் பெரிய குடிகாரராகவும் யாரையும் மதிக்காமலும் வாழ்ந்த இராணுவ அதிகாரி ஒருவர் தன்னுடைய அறுபதாவது வயதில் ஆண்டவர் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டுப் புதிய மனிதராய் வாழத் தொடங்கினார்.

இது நடந்து ஒருசில மாதங்கள் கழித்து, அவர் ஒரு மருத்துவக் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டார். அவர் மாணவர்களிடம் பேசும்போது, “ஒரு காலத்தில் நான் மிகப்பெரிய குடிகாரனாக இருந்தேன். இப்போது குடியை முற்றிலுமாக விட்டுவிட்டேன். எல்லார்மீதும் எரிந்து எரிந்து விழுந்துகொண்டிருந்த நான், இப்போது எல்லாரிடமும் அன்பாக இருக்கின்றேன். முன்பெல்லாம் நான் தன்னலத்தோடு இருந்தேன். இப்போது நான் பிறர் நலத்தோடு, முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்துகொண்டிருக்கின்றேன்” என்றார்.

அவர் பேசி முடித்ததும், மாணவன் ஒருவன் எழுந்து, “ஒருவர் சிறு வயதில் எப்படி இருக்கின்றாரோ, அப்படித்தான் அவர் பெரியவரானபோதும் இருப்பார் என்று நான் எங்கோ படித்திருக்கின்றேன். அப்படியிருக்கும்போது, உங்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கிறீர்கள். இதை என்னால் நம்ப முடியவில்லை” என்றான். அதற்கு அவர் அவனிடம், “நீ சொல்வது சரிதான். ஆனால் ஒரு காலத்தில் நான் மனிதருக்குப் பணிபுரிந்து வந்தேன். இப்போதோ நான் ஆண்டவருக்குப் பணிபுரிந்து வருகின்றேன். அதனால்தான் என்னுடைய வாழ்வில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டது” என்று பொறுமையாகப் பதிலளித்தார்.

ஆம், ஒரு காலத்தில் தன்னலத்தோடு, எப்படியெல்லாமோ வாழ்ந்த இந்த இராணுவ வீரர், ஆண்டவர் இயேசுவால் தொடப்பட்டதும், பிறர் நலத்தோடு வாழத் தொடங்கினார். இன்றைய இறைவார்த்தை, நாம் நம்மைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஊனியல்போடு வாழ்பவர்கள் தன்னலத்தோடு இருக்கலாம். கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்கள் அப்படி இருக்கலாகாது. பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா?” என்று கேட்டுவிட்டு, “நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்” என்கிறார்.

கிறிஸ்துவினால் ஊக்கம் பெற்ற ஒருவர், அல்லது தூய ஆவியால் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்ட ஒருவர் நிச்சயம் தன்னலத்தை நாடாமல், பிறர் நலத்தைத்தான் நாடுவார் என்பது பவுல் நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, நாம் எப்படிப் பிறரைச் சார்ந்தவற்றை நாடவேண்டும் என்பதற்கு, விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றவரையும் அழையுங்கள் என்று கூறுகின்றார். தெரிந்தவர்களையும் நண்பர்களையும் வசதி படைத்தவர்களையும் விருந்துக்கு அழைப்பது ஒன்றும் பெரிய செயல் கிடையாது. அதில் அடங்கியிருப்பது தன்னலமே! மாறாக, ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் அழைப்பது பிறர் நலம் சார்ந்த செயல். ஏனெனில், அவர்களால் நம்மிடமிருந்து பெற்ற நன்மைகளைத் திரும்பச் செலுத்த முடியாது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு நேர்மையாளர் உதிர்த்தெழும்போது கைம்மாறு கிடைக்கும் என்கிறார் இயேசு.

நாம் ஒவ்வொருவரும் கடவுளின் மக்கள், தூய ஆவியாரால் இயக்கப்படுவர்கள் எனில், அவரைப் போன்று எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய வாழக்கை வாழ நாம் தயாரா? சிந்திப்போம்.

Comments are closed.