நவம்பர் 1 : நற்செய்தி வாசகம்

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————–

மறையுரைச் சிந்தனை

புனிதர் அனைவர் பெருவிழா

இன்று திருச்சபையானது புனிதர் அனைவரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. “ஒவ்வொரு புனிதரும் தங்கள் மனநிலை ஆளுமைத்தன்மையிலும், ஆன்மீக தனிவரங்களிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நின்றாலும் அனைவரும் இயேசுவின் அன்பின் பதிப்புக்களாகவும், சிலுவையின் சாட்சிகளாகவும் ஒன்றிணைந்து நிற்பார்கள்” என்பார் நமது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள்.

மேலும் இறையடியார் ஒருவர் புனிதர் எனப்படுபவர் யார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் தருவார்,

“புனிதர்கள்

 1)மனிதராகப் பிறந்தவர்கள்,

 2) இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் திகழ்ந்தவர்கள்,

 3) தங்களது சான்று வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள்,

 4) என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்,

 5) தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள்,

 6) தங்கள் உயிரையே இறைமாட்சிக்காகக் கையளித்தவர்கள்” என்று.

ஆம், திருச்சபை பல்வேறு இறையடியார்களை, இறைவழி வாழ்ந்தவர்களைப் புனிதர்களாக அங்கிகரித்திருந்தாலும், இன்னும் எத்தனையோ மனிதர்கள் கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்திருக்கிறார்கள். எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து விழா கொண்டாட வேண்டும் என்பதற்குதான் திருச்சபை நவம்பர் ஒன்றாம் தேதியை புனிதர்கள் அனைவரின் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.

அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார்.

முன்னதாக கி.பி. 600 ஆம் ஆண்டில் உரோமையில் இருந்த அனைவரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். இதனால் எல்லாக் கடவுளது சிலைகளும் வைக்கப்பட்டிருந்த பான்தேயேன் கோவிலானது அன்னை மரியாளுக்கும், அனைத்துப் புனிதர்களுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது. அக்கோவிலில் ஏற்கனவே இருந்த வேற்று தெய்வக் கடவுளின் சிலைகளானது திருந்தந்தை நான்காம் போனிபஸ் அவர்களின் உத்தரவின் பேரில் அடித்து நொறுக்கப்பட்டது. இப்பெருவிழா நாளில் பெந்தேயன் கோவிலுக்குச் சென்று மக்கள் யாவரும் இறையருளைப் பெற்றுச் செல்வார்கள்.

அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் திருச்சபையும், இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ‘எல்லா இனத்தைச் சேர்ந்த, மொழியைப் பேசக்கூடிய எண்ணிக்கையில் அடங்காத மக்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டிக்கும் இடையில் இருந்து இறைவனை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்’ என்று படிக்கின்றோம். இவர்கள் யார்?. இவர்கள் வேறு யாருமல்ல, இறைவழியில் நடந்து கடவுளையும், அயலாரையும் அன்பு செய்த தூயவர்கள் – புனிதர்கள் – கடவுளின்மக்கள் – ஆவர்.

இவர்களைப் போன்று இறைவனின் திருமுன் நிற்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு தந்த மலைப்பொழிவை யாராரெல்லாம் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்களோ, அவர்களே இறைவன் தரும் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறமுடியும். எளிய உள்ளத்தோராய், தூய இதயத்தோராய், நீதியின்மீது தாகமுடையோராய், அமைதிக்காக உழைப்போராய், கனிவுடையோராய், நீதிக்காக துன்பங்களை அனுபவிப்பவராய், இன்னும் பல்வேறு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழுகின்றபோது இறைவன் தரும் விண்ணரசு நமக்கு எப்போதும் உண்டு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இல்லை.

நாம் நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் போதனைகளின் படி வாழ்கின்றோமா? நம்மோடு வாழும் எளியோரை, இறைவனை அன்பு செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அரசியும், புனிதையுமான புனித ஹங்கேரி நகர எலிசபெத். இவர் 1207 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டு அரசர் அந்திரேயாவுக்கு மகளாகப் பிறந்தவர். 1221 ஆம் லண்ட்ரவேயின் அரசன் நான்காம் லூயி மன்னனுக்கு தன்னுடைய பதிமூன்றாம் வயதிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

அரசியான எலிசபெத் தான் அரசி என்றெல்லாம் பாராது ஏழைகள், வறியவர் யாவருக்கும் உதவி செய்துவந்தார். ஒருமுறை நாட்டில் கொள்ளை நோய் பரவியபோது ஏராளமான மக்கள் மடிந்துபோனார்கள். அத்தகைய வேளையில் அரசி துன்புறக்கூடிய மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்தார். இது அவளுடைய அத்தைக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவளது அத்தை, அதாவது மன்னன் லூயின் தாயார் தன்னுடைய மகனிடம் மருமகளைப் பற்றிக் குறைகூறினாள். ஆனால் மன்னனோ தன் மனைவியின்மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்ததால் அதனை அவன் கண்டுகொள்ளவில்லை.

Comments are closed.