மும்மத இணக்கத்தை ஊக்குவிக்கும் குழுவுடன் திருத்தந்தை
உலக அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்விற்கான ஆவணத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதில், ஆபிரகாமிய குடும்ப இல்லத்தின் தலைவர் முகம்மது கலீஃபா அல் முபாரக் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மதங்களுடனான உரையாடலுக்கான திருப்பீடத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 28, திங்களன்று ஆபிரகாமிய குடும்ப இல்லத்திலிருந்து வருகை புரிந்த ஐக்கிய அரபு குழுவினரை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த ஆபிரகாமிய இல்லம் ஒரு யூதத் தொழுகைக் கூடம், ஒரு தேவாலயம், ஒரு மசூதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும்.
2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட இந்த தனித்துவமான கட்டிடம், உலக அமைதி மற்றும் உடன் பிறந்த உணர்வு குறித்த வரலாற்று சிறப்புமிக்க 2019 ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதங்களுக்கிடையிலான நல்லிணக்க வாழ்வு வாழ ஊக்குவிக்கிறது.
அபுதாபியில் அமைந்துள்ள ஆபிரகாமிய குடும்ப இல்லம் கற்றல், உரையாடல் மற்றும் நம்பிக்கைக்கான மையமாகும்.
2023இல் திறக்கப்பட்டதிலிருந்து இந்த ஆபிரகாமிய இல்லம், திருஅவை வழிபாடுகளுக்காக 130,000 விசுவாசிகளை வரவேற்றுள்ளது, மேலும், திருமணங்கள், திருமுழுக்கு போன்ற கொண்டாட்டங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை நடத்தியுள்ளது.
உலகளவில் மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் அமைதியான வாழ்வை முன்னெடுத்துச் செல்வதில் திருத்தந்தை மற்றும் கத்தோலிக்க திருஅவையின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, ஆபிரகாமிய குடும்ப இல்லத்திற்குள் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் ஆலயத்தை பிரதிபலிக்கும் அன்பளிப்பு ஒன்றை இக்குழுவினர் திருத்தந்தைக்கு வழங்கினர்.
மேலும், உடன்பிறந்த உணர்வு பற்றிய ஆவணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அபுதாபியில் உள்ள அல்-அஸார் அஹ்மத் அல்-தாயேயின் தலைமைகுரு இணைந்து 2019ல் கையெழுத்திட்டது குறிப்பிடும்படியானது.
Comments are closed.