அக்டோபர் 30 : நற்செய்தி வாசகம்

இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில்

இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.

அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்.

‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார்.

அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார்.

ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————++++

“தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்”

பொதுக் காலத்தின் முப்பதாவது வாரம் புதன்கிழமை

I எபேசியர் 6: 1-9

II லூக்கா 13: 22-30

“தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்”

சிறுவனின் கண்ணீர்க் கதை:

அது ஒரு காலை வேளை. பங்குப் பணியாளர் கோயில் வளாகத்தைச் சுற்றிச் பார்த்துவிட்டுப் பங்குக் கோயிலுக்குள் நுழைந்தார். கோயிலின் ஒரு மூலையில் சிறுவன் ஒருவன் மிகவும் மனமொன்றி இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தான். பங்குப் பணியாளர் அவனை வியப்போடு பார்த்துக்கொண்டு, அவன் அருகில் சென்றபோது, அவன் அழுதுகொண்டே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.

சிறிது நேரத்தில் சிறுவன் தன்னுடைய இறைவேண்டலை முடித்துக்கொண்டு, எழுந்தபோது, பங்குப் பணியாளர் அவனிடம், “நீ இறைவனிடம் வேண்டும்போது அழுதது போன்று தெரிந்ததே! உனக்கு என்ன ஆயிற்று?” என்று வாஞ்சையோடு கேட்டார். சிறிது நேரத்திற்கு எதுவுமே பேசாமல் இருந்த சிறுவன், “என்னுடைய தந்தையும் சரி, தாயும் சரி இருவரும் என்னை அன்பு செய்வதைவிடவும், எங்கள் வீட்டில் உள்ள நாயைத்தான் அன்பு செய்கிறார்கள். அதனால்தான் நான் கடவுளிடம், என்னுடைய பெற்றோர் நாயை விடவும் என்னை மிகவும் அன்பு செய்யவேண்டும் என்று கண்ணீர் வடித்து வேண்டினேன்” என்று வருத்தத்தோடு சொன்னான்.

இதைக் கேட்டுப் பங்குப் பணியாளர் அதிர்ந்து போனார். ஆயினும் அவர் அவனிடம், “உன்னுடைய பெற்றோர் உன்னை மிகவும் அன்பு செய்வார்கள். கவலைப்படாதே!” என்று தேற்றி அனுப்பி வைத்தார்.

ஆம், இன்றைக்கு ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அன்பு செய்யாமல், வேறு ஏதோவொன்றை அன்பு செய்து, அவர்களுக்கு எரிச்சல் மூட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழநிலையில், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை பெற்றோர் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டவேண்டாம், பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிந்திருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தந்தை, தாய், பிள்ளைகள் இவர்களை உள்ளடக்கியதுதான் குடும்பம். பெற்றோர் மட்டும் இருந்து, பிள்ளைகள் இல்லை என்றாலோ, அல்லது பிள்ளைகள் மட்டும் இருந்து, பெற்றோர் எங்கோ இருந்தாலோ அதற்குப் பெயர் குடும்பம் இல்லை. எனில், ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க, இருவருக்குள்ளும் அன்பு இருக்கவேண்டும். நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று, பிள்ளைகளின் கடமையை உணர்த்துகின்றார். தொடர்ந்து, “தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்” என்று சொல்லி, தந்தையரின் அல்லது பெற்றோரின் கடமையை உணர்த்துகின்றார். இவ்வாறு பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக, பெற்றோர் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாமல் இருப்பதன் மூலமாக, அவர்கள் ஆண்டவரிடமிருந்து நன்மை பெறுகின்றார்கள் என்கிறார் பவுல்.

நற்செய்தியில் இயேசு, யார் மீட்புப் பெறுவார்? என்ற கேள்விக்கு, “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கிறார். இங்கே இடுக்கமான வாயில் என்பதை பெற்றோருக்குக் கீழ்ப்படிவதன் வழியாகக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது வழியில் நடத்தல் என்று எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் மீட்பினைப் பெறுவோம் என்பது உறுதி

சிந்தனைக்கு:

 அடக்கி ஆள்வதன் மூலம் எதுவும் நடப்பதில்லை; அன்பினாலேயே எல்லாமும் நடக்கும்.

 கடவுள் தரும் மீட்பு எல்லாருக்கும் உண்டு. அதைப் பெற ஆண்டவரின் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

 உண்மையான அன்பு குடியிருக்கும் குடும்பம் திருக்குடும்பமாகத் திகழும்.

இறைவாக்கு:

‘எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்’ (1 திமொ 2:4) என்பார் புனித பவுல். எனவே, நாம் கடவுள் அளிக்கும் மீட்பினைப் பெற, அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.