அனைவரையும் உள்ளடக்கிய உலகை உருவாக்குவதற்கான அடையாளம் G7 மாநாடு

ஒவ்வொரு நபரும் அவரவர் திறன்களுடன் முழுமையாக வாழ்ந்து சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு சிறந்த உலகத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தையும் உருவாக்குவதற்கான விருப்பத்தின் உறுதியான அடையாளம் G7 மாநாடு என்று கூறினார் திருத்தந்தை.

அக்டோபர் 14 முதல் 16 வரை இத்தாலியின் பெருஜியா அருகில், உள்ளடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற G7 இத்தாலி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏறக்குறைய 53 பேரை அக்டோபர் 17 வியாழன் காலை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு நபரும் உலகளாவிய குடும்பத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கு யாரும் பலியாகிவிடக் கூடாது என்றும் இக்கலாச்சாரம் தவறான எண்ணத்தை உருவாக்குகிறது, சமூகத்திற்கு தீங்கினை விளைவிக்கின்றது என்றும் கூறினார்.

குறைபாடுகள் உள்ளவர்களைச் சேர்த்து செயல்படுவது அனைத்து நாடுகளாலும் முன்னுரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், குறைபாடு உடையவர்கள் என்று கூறுவதற்குப் பதிலாக, மாற்றுத்திறன் உடையவர்கள் என்று கூறுவது மிகவும் நல்லது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மாற்றுத்திறனாளிகளின் மாண்பை, உரிமையை அங்கீகரிக்கும் போராட்டம் இன்னும் சில நாடுகளில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குதல் என்பது கட்டமைப்புக்களை மாற்றியமைப்பது அல்ல, மாறாக மாற்றுத்திறனாளிகள் பற்றிய நமது மனப்போக்குகளை மாற்றுவதன் வழியாக சமூக வாழ்வின் முழு பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்றுதல் என்றும் கூறினார்.

மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான பங்களிப்பு இல்லாமல் உண்மையான மனித வளர்ச்சி இல்லை என்றும், உடல், சமூக, கலாச்சார தடைகள் அகற்றப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தவும், பொதுநன்மைக்கு பங்களிக்க மனித வளர்ச்சி உதவுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.