அக்டோபர் 14 : நற்செய்தி வாசகம்

யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில்

மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————–

“உரிமை வாழ்வில் நிலைத்திருங்கள்”

பொதுக் காலத்தின் இருபத்து எட்டாம் வாரம் திங்கட்கிழமை

I கலாத்தியர் 4: 22-24, 26-27, 31, 5:1

II லூக்கா 11: 29-32

“உரிமை வாழ்வில் நிலைத்திருங்கள்”

உரிமைவாழ்வைப் பெற்றுக்கொண்ட திருடன்:

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தித்தாள், பெரிய திருடன் ஒருவன் மனம்மாறி, ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டதை வெளியிட்டிருந்தது. இதில் வியப்பு என்னவெனில், அத்திருடன் தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு வங்கியிலிருந்து கொள்ளையடித்திருந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்ததுதான்.

“மனம்மாறியது போதாதா? எப்போதோ திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமா?” என்று காவல்துறை அதிகாரிகள் அவனிடம் கேட்டதற்கு, “நான் திருடிய பணத்தைத் திருப்பித் தராவிட்டால், ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டதற்கு எந்தவோர் அர்த்தமுமில்லாமல் போய்விடும்” என்று திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தான் அந்தத் திருடன்.

ஒருகாலத்தில் அடிமை நிலையிலிருந்த திருடன், ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதன் மூலம் உரிமை வாழ்வைப் பெற்றுக்கொண்டான். அதில் நிலைத்தும் நின்றான் அவன். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் உரிமை வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

Comments are closed.