இதயங்களைத் தூயஆவியார் மாற்றத்திற்குக் கையளிப்பதே செபம்

இயேசு விண்ணகத்தந்தையை நோக்கிச் செபிக்கக் கற்றுக்கொடுத்த செபத்தில் எல்லாமே அடங்கி இருக்கின்றது என்றும், அச்செபமானது உலகளாவிய செபம், விண்ணத்தந்தையின் பிள்ளைகளது செபம், நம்பிக்கையின் செபம், துணிவின் செபம், மாற்றத்தின் செபம், மிக உயர்ந்த செபம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 9 புதன்கிழமை சன் பவுலோ பதிப்பகத்தாரால் தயாரிக்கப்பட்டு வெளிவர இருக்கும் “செபிப்பது என்பது நமது இதயங்களைத் தூய ஆவியார் மாற்றுவதற்குக் கையளிப்பது” என்ற புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது பாட்டியே தனக்கு செபிக்கக் கற்றுக்கொடுத்தார், தூய யோசேப்பு மீதான பக்தியை வளரச் செய்தார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், இயேசு சபையில் நுழைந்தவுடன் ஆன்மிக அருள்பணியாளர்கள் உடன் நண்பர்கள் தனது செப அனுபவத்தில் மேலும் வளர உதவினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினா இயேசுசபை அருள்பணியாளரான மிகுவேல் ஆன்செல் ஃபியொரிதோ ஒரு தத்துவப்பேராசிரியர், ஆன்மிக ஆர்வலர், அவரது படைப்புக்கள் இத்தாலியிலும் வெளியிடப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், எப்படி செபிக்க வேண்டும், செபிக்க விருப்பம் இல்லாதபோதும் எப்படி செபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து ஆன்மிக வாழ்வில் வளர்த்தவர் அவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தையாக இருந்தாலும் செபிப்பதை ஒருபோதும் நான் மறப்பதே இல்லை, சில நேரங்களில் வாய்மொழி செபம், திருநற்கருணை முன் அமைதியாக செபம், காலை நண்பகல், மாலை திருப்புகழ்மாலை தனிசெபம், என எல்லா வழிகளிலும் செபிப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், தனது வாழ்வின் மகிழ்வான மற்றும் துயரமான நேரங்களிலும் செபிக்கத் தவறியதில்லை என்றும் கூறியுள்ளார்.

அன்னை மரியா மீது அளவற்ற பக்தி கொண்டவரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எப்போதும் செபமாலை செபிப்பதாகவும், நமது தாயாக நம்மை வழிநடத்தும் அன்னை மரியாவின் துணையை எப்போதும் நாடுவதாகவும், அதற்காகவே தனது ஒவ்வொரு தனிப்பட்ட மற்றும் குழு சந்திப்புக்களில் இறுதியில் தனக்காக செபிக்கக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.