அக்டோபர் 4 : நற்செய்தி வாசகம்

என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்

என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்.

உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————–

கடவுளையே புறக்கணிப்பவர்கள்

பொதுக் காலத்தின் இருபத்து ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை

I யோபு 38: 1, 12-21, 40: 3-4

II லூக்கா 10: 13-16

கடவுளையே புறக்கணிப்பவர்கள்

எது பெரிய பாவம்?:

அமெரிக்காவைச் சேர்ந்த பன்முகக் கலைஞர் ஜார்ஜ் பெர்னாட்சா. ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அவரிடம், “உலகிலேயே மிகப்பெரிய பாவம் எது?” என்று கேட்டார். உடனே ஜார்ஜ் பெர்னாட்சா தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்.

அவர் தீவிரமாக யோசிப்பதைப் பார்த்த செய்தியாளர், “உலகிலேயே மிகப்பெரிய பாவம் வெறுப்பா?” என்றார். “இல்லை” என்று அவர் சொன்னதும், “விபசாரமா?” என்று செய்தியாளர் கேட்டார். அதற்கும் அவர், “இல்லை” என்றதும், “அப்படியானால் மன்னிக்க மனமின்மையா?” என்று செய்தியாளர் ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.

“நீங்கள் சொன்ன எதுவுமே இல்லை. ஆனால், நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பாவம் கண்டுகொள்ளாமை” என்று தெளிவாகப் பதிலளித்தார் ஜார்ஜ் பெர்னாட்சா.

ஆம், கண்டுகொள்ளாமையே மிகப்பெரிய பாவம். இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் தன்னைக் கண்டுகொள்ளாமல், தன்னைப் புறக்கணித்ததற்காக அவர்களைக் கடுமையாகச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

Comments are closed.