பெல்ஜியம் ஆயர்கள் அருள்பணியாளர்கள், துறவறத்தாருடன் திருத்தந்தை
பெல்ஜியத்தின் கோகெல்பர்க் திருஇருதய பேராலயத்தில் அந்நாட்டு ஆயர்கள் அருள்பணியாளர்கள், துறவறத்தார், நிரந்தர திருத்தொண்டர்கள், மேய்ப்புப்பணியாளர்கள் ஆகியோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி, மகிழ்ச்சி, இரக்கம் எனும் மூன்று தலைப்பில் அவர்களுக்கு உரையாற்றினார்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
பெல்ஜியத்தில் உள்ள இந்தத் தலத்திருஅவையானது இயக்கத்தில் உள்ள தலத்திருஅவையாக, ஏழை எளிய மக்களின் உருவாக்கத்தில் எடுக்கும் முயற்சிகளுக்காக பாராட்டுகின்றேன். தலத்திருஅவையின் இருப்பு, மக்களுடன் இணக்கம், இரக்கச் செயல்பாடுகள் போன்றவற்றிற்கு சான்று பகர்கவர்களாக இருக்கின்றீர்கள். எனவே உங்களுடன் நற்செய்தி அறிவிப்புப்பணி, மகிழ்ச்சி, இரக்கம் என்னும் மூன்று கருத்துக்களை முன்னிறுத்தி அதன் வழியில் முன்னோக்கிச் செல்ல உங்களை வலியுறுத்த விரும்புகின்றேன்.
நற்செய்தி அறிவிப்புப் பணி
நாம் வாழ்கின்ற காலமும், மேற்கத்திய பகுதிகளில் நாம் காணும், நம்பிக்கை கொள்வதில் நெருக்கடியும், நம்மை நமது அடிப்படை வாழ்வான நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு திரும்ப அழைத்துச் செல்கின்றன. இயேசு இவ்வுலகிற்குக் கொண்டு வந்த நற்செய்தியின் அழகை பிரதிபலிக்கும்படிச் செய்கின்றன.
ஆபிரகாம், மோசே, மற்றும் இறைவாக்கினர்கள் தங்களது அழைப்பிற்கு முன் அனுபவித்த நெருக்கடி போன்று, நாம் சந்திக்கும் ஒவ்வொரு நெருக்கடியும் நம்மை உலுக்கி மாற்றத்தை நம்மில் ஏற்படுத்துகின்றன. ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பான இது திருவிவிலியத்தில் கைரோஸ் என்று அழைக்கப்படுகிறது.
பாவ இயல்பு என்னும் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆவியின் பாதைகளைக் கண்டுபிடிப்பது நற்செய்திப்பணியாற்றும் நமக்குக் கொடுக்கப்பட்ட கடமை. தனித்து இயங்கும் நிலையிலிருந்து ஒன்றிணைந்த திருஅவையாக, பிறரை வரவேற்கும் திருஅவையாக, நாம் மாற வேண்டும். திருஅவையின் இத்தகைய மாற்றத்திற்கு ஒரு துணிவு தேவை. அருள்பணியாளர்கள், துறவறத்தார் என அனைவரும் துணிவுடன் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும்.
அனைவரும் ஒன்றாக செல்கின்றோம் ஆனால் வேறு பாதைகளில் செல்கின்றோம். என்று யான்கா என்னும் மேய்ப்புப்பணியாளர் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். நம்மிடமிருந்து வேறுபட்டவர்களைச் சந்திக்க இறைவன் நம் இதயத்தைத் திறக்கிறார். திருஅவையில் அனைவருக்கும் இடம் உள்ளது, யாரும் மற்றொன்றின் புகைப்பட நகலாக இருக்கக்கூடாது. திருஅவையில் ஒற்றுமை என்பது வேற்றுமையில் நல்லிணக்கத்தைக் கண்டறிவது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
Comments are closed.