இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன?” என கூறப்பட்டுள்ளது.
இப்பூமியில் நாம் வாழும் காலத்தில் மண்ணக செல்வத்தை விட விண்ணகத்தில் செல்வம் சேர்ப்பதே நமக்கு நல்லது என்ற உண்மையை உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி
பதிலுரைப்பாடல் திருப்பாடல் 90:4-ல்,
“ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போல இருக்கும் ஆண்டவர் நம் அருகில் இருக்கும் போது நாளைய பற்றிய கவலை நமக்கு எதற்கு என்ற விசுவாசத்தோடு நாம் துணிவுடன் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று கூறினான்.
ஏரோதுவைப் போல இன்று நிறைய பேர் செய்த தவறுக்கு குற்ற உணர்ச்சியுடன் காலம் முழுவதும் வாழ்கின்றனர்.
திருஅவை நமக்குத் தந்துள்ள அற்புதமான ஒப்புரவு அருட்சாதனத்தை நாம் அனைவரும் பயன்படுத்தி புதியதொரு வாழ்வை நாம் வாழ வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இன்றைய புனிதர்களான புனித கோஸ்மாஸ் மற்றும் புனித தமியான் இரட்டையர்கள் ஏழைகளுக்கு செய்த தொண்டினால் குணமளிக்கும் வல்லமையை இறைவனிடம் இருந்து பெற்றனர். எண்ணற்ற மக்கள் கிறிஸ்தவர்களாக மனம்மாற காரணமாக இருந்த இருவரும் மறைசாட்சிகளாக மரித்தனர். இந்த இரு புனிதர்களின் புனித வாழ்க்கையை நாம் முன்மாதிரியாகக் கொள்ள இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.