செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம்
இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13
அக்காலத்தில்
மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————
மறையுரைச் சிந்தனை
புனித மத்தேயு – செப்டம்பர் 21
இன்று திருச்சபையானது தூய மத்தேயுவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. மத்தேயு என்றால் ‘கடவுளின் கொடை” என்பது பொருளாகும். மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய பெயருக்கு ஏற்றது போன்று கடவுளிடமிருந்து பெற்ற கொடையை எல்லா மக்களுக்கும் வழங்கினார். இவர் எழுதிய நற்செய்தி நூல் மிகவும் சிறப்பானது. பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ நெறியை இந்தியாவிற்கு அறிவிக்க வந்த தூய பிரான்சிஸ் சவேரியார் தன்னோடு மத்தேயு நற்செய்தியைத்தான் எடுத்து வந்தார் என்பது மத்தேயு நற்செய்தியின் சிறப்பு. மேலும் நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகள் தன்னுடைய போராட்டத்திற்கான உத்வேகத்தை ஆண்டவர் இயேசுவின் மலைபொழிவிலிருந்துதான் (மத்தேயு நற்செய்தியிலிருந்துதான்) பெறுகிறார் என்பது மத்தேயு நற்செய்தியின் கூடுதல் சிறப்பு.
Comments are closed.