காசாவில் அமைதிக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை
காசாவில் அமைதிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதுவரை காசாவில் 41,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை மாலை தனது ஆசியா மற்றும் ஒசியானியாவிற்கான 45ஆவது திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து உரோம் திரும்புகையில் விமானத்தில் வைத்து பத்திரிக்கையாளர்கள் தொடுத்த கேள்விகளுக்கு பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிழக்கின் நியுயார்க் என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த, தூய்மையான கல்வியறிவு பெற்ற வானளாவிய கட்டிடங்கள் கொண்ட, பல்சமய கலாச்சாரங்கள் கொண்ட நகரம் என்றும், இளைஞர்கள் மற்றும் பல்மதத்தலைவர்கள் உடனான சந்திப்பு, உடன்பிறந்த உறவிற்கான சான்றாக அமைந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிங்கப்பூர் மக்களின் கலாச்சாரம் தன்னை அதிகமாக ஈர்த்தது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அம்மக்களிடையே பாகுபாடு என்பது இல்லை என்றும், கலாச்சாரங்களை ஈர்க்கும் ஒரு பெரிய தலைநகரமாக சிங்கப்பூர் விளங்குகின்றது என்றும் கூறினார்.
குழந்தைகள் தான் நமது எதிர்காலம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கிழக்கு திமோரில், தான் அதிகமான குழந்தைகளைக் கண்டதாகவும், சிங்கப்பூரில் குறைவான குழந்தைகளைக் கண்டதாகவும் எடுத்துரைத்து, ஒவ்வொரு நாடும் நபரும் மற்றொன்றிலிருந்து வேறுபட்ட செழுமையைக் கொண்டுள்ளது, நமது தொடர்புகளில் உடன்பிறந்த உறவு மிக முக்கியமானது என்றும் கூறினார்.
Comments are closed.