செப்டம்பர் 14 : நற்செய்தி வாசகம்

மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————————————–

மறையுரைச் சிந்தனை

திருச்சிலுவையின் மகிமை – செப்டம்பர் 14

இன்று திருச்சபையானது திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இவ்விழா ‘திருச்சிலுவையின் மகிமை’, ‘சிலுவையின் வெற்றி’, ‘பெருமைமிகு திருச்சிலுவை நாள்”, ‘உயிர்வழங்கும் அரிய சிலுவை உயர்த்தப்பட்ட நாள்’ என பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையிலே, இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்கும்முன் இதனுடைய வரலாற்றுப் பின்புலத்தை சற்று ஆய்ந்து பார்ப்போம்.

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டன்டைன் என்ற உரோமைப் பேரரசரின் அன்னை, புனித ஹெலெனா அவர்கள், ஒருமுறை புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொண்டபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை அகழ்வதற்கு அவர்கள் தூண்டப்பட்டார். அவ்விடத்தை அகழ்ந்தபோது, மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்டச் சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, புனித ஹெலெனா ஒரு சோதனையை மேற்கொண்டார். அதாவது மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அவர் அவ்விடத்திற்குக் கொணர்ந்தார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்டச் சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.

அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், புனித கல்லறைக் கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில், 335ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகியத் தேதிகளில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாள் என்று திருச்சபை கொண்டாடப்படுகிறது. இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பெரிய துண்டு புனித கல்லறைக் கோவிலில் பாதுக்காக்கப்பட்டு வருகின்றது.

614 ஆம் ஆண்டு பெர்சிய நாட்டு அரசன் மெசபத்தோமியாவின்மீது (புனித நாடுகள் இருக்கும் பகுதி) படையெடுத்துக் சென்று அங்கிருந்த குருக்கள், கன்னியர்கள் கிறிஸ்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்து, அங்கே இருந்த திருச்சிலுவையை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அதை 627 ஆம் ஆண்டு ஹெராக்ளியஸ் என்ற அரசன்தான் மீட்டுக்கொண்டு வந்து மீண்டும் அதே இடத்தில் நிறுவினான். அன்றிலிருந்து மகிமை பொருந்திய திருச்சிலுவை அதே இடத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறது.

தூய ஆண்ட்ருஸ் இவ்வாறு கூறுவார், “திருச்சிலுவை நம்மை இருளிலிருந்து, ஒளிக்கு அழைத்து வந்தது. அதுவே நமக்கு வாழ்வு தந்தது; விண்ணகத்தின் கதவைத் திறந்து தந்தது” என்று. ஆம், இது எவராலும் மறுக்கமுடியாத உண்மை. பவுலடியார் கூட இதே கருத்தை 1 கொரி 1:18 ல் வலியுறுத்துவார். “சிலுவையைப் பற்றிய போதனை அழிவுறுவோருக்கு மடமை, ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ கடவுளின் வல்லமை” என்று.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச் சுற்றி வரும்போது, ஓர் என்ற மலையிலிருந்து “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்படும்போது மோசேக்கும், கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இதனால் கடவுள் அவர்கள்மீது சினம் கொண்டு கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி சாகடிக்கிறார். ஆனால் மோசே மீண்டும் கடவுளிடத்தில் மன்றாடுகிறபோது, அவர் அவர்கள்மீது இரக்கம் கொண்டு, “வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து, அதனை மக்கள் நடுவே வை, அப்போது பாம்பினால் கடிபட்ட எவரும் அதனைப் பார்க்கிறபோது உயிர்பிழைப்பார்கள்” என்று மோசேயிடம் கூறுகிறார். மோசேயும் அவ்வாறே செய்ய, இஸ்ராயேல் மக்கள் உயிர்பிழைக்கிறார்கள்.

இப்பகுதியில் வரக்கூடிய வெண்கலப்பாம்பு திருச்சிலுவையின் முன் அடையாளமாக இருக்கிறது. எவ்வாறெனில் வெண்கலப்பாம்பைப் பார்த்தவர்கள் வாழ்வுபெற்றதுபோல திருச்சிலுவையை பார்ப்பவர்கள் வாழ்வு பெறுவார்கள்.

பொதுவாக சிலுவை மரணமானது அல்லது சிலுவையானது மிகவும் இழிவாகக் கருதப்பட்டது. இது கொடியவர்களுக்கும், நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும்தான் வழங்கப்படும். ஆனால் அப்படிப்பட்ட சிலுவைச் சாவை ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், “கடவுள் தன்மையில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார்” என்று. ஆம், இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் கோலம்கொண்டு, சிலுவை மரணம் ஏற்றார் என்றால் அது அவர் நம்மீது கொண்ட அளவுகடந்த அன்புகொண்டிருக்கிறார் என்பதே உண்மை. தந்தைக் கடவுள் தன் மகனாகிய இயேசுவையே இவ்வுலகிற்கு அளித்தார் என்றால், இயேசு அதனைச் செயல்படுத்தினார். அதனால்தான் கடவுள், ஆண்டவர் இயேசுவை எப்பெயருகும் மேலாக உயர்த்துகிறார். நாமும் இறைவனின் திட்டத்தின்படி வாழ்ந்தோம் என்றால் கடவுள் நம்மை மேலும், மேலும் உயர்த்துவார்.

இயேசுவின் குழந்தைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியாகச் சொல்வர்.

ஒருமுறை இயேசு, பைட்ஸ் என்ற சிறுவனோடு பேசிக்கொண்டிருந்தபோது அவனித்தில், “எதிர்காலத்தில் நீ என்னவாக போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு பைட்ஸ், “நான் மிகப்பெரிய தச்சராக மாறி, அரசர் அமர்வதற்கான சிம்மாசனம் ஒன்றைச் செய்வேன். அரசர் அதில் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குவார்” என்றான். இயேசுவும் சரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பைட்ஸ் சில நாட்களுக்குப் பிறகு ஜாப்பா என்ற ஓர் இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

ஆண்டுகள் பல கழிந்தன. அப்போது இயேசுவை சிலுவையில் அறைய, பிரத்யோகமான சிலுவைமரம் ஒன்று தேவைப்பட்டது. எனவே அப்படிப்பட்ட சிலுவைமரம் செய்வதற்குப் பெயர்போன பைட்ஸ் அங்கே அழைத்துவரப்பட்டான். அவன் இயேசுவுக்குதான் சிலுவை செய்ய வந்திருக்கிறோம் என்று தெரியாமல் செய்தான்.

Comments are closed.