ஏழைகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் திருத்தந்தை
திருத்தந்தையின் அடுத்த நிகழ்வு இந்தோனேசிய ஆயர் பேரவையின் தலைமை இல்லத்தில் பிறரன்பு உதவி நடவடிக்கைகளுடன் தொடர்புடையோரைச் சந்திப்பதாக இருந்தது. அதாவது, உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, இந்திய நேரம் காலை 8.30 மணிக்கு Istiqlal மசூதியிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை, 4.7 கிலோமீட்டர் பயணம் செய்து 15 நிமிடங்களில் ஆயர் பேரவை மையத்தை வந்தடைந்தார். இந்த மையம் புதிதாக கட்டப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதிதான் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இந்த மையத்தில் ஏழைகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என ஆயர் பேரவையிலிருந்து பிறரன்பு உதவிகளைப் பெறும் பலர் குழுமியிருக்க, இந்தோனேசிய ஆயர் பேரவைத்தலைவர், ஆயர் Antonius Subianto அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன், முதலில் இருவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். முதலில் பேசிய மிமி என்ற பெண்மணி தான் தன் 17வது வயதில் கண்பார்வையை இழந்ததாகவும், கத்தோலிக்கராகிய தான் சிலுவைப்பாதையில் ஆறுதலை அடைந்ததாகவும், இயேசு தன்னைக் கைவிடவில்லை என்பதை தான் வாழ்வு முழுவதும் உறுதியாக நம்பிவருவதாகவும் எடுத்துரைத்தார். மனிதர்களின் மாண்புக்காக திருஅவை தொடர்ந்து உழைத்து வருவதற்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு நம்பிக்கை தரும் வகையிலான திருத்தந்தையின் பரிவுணர்வுக்கும் தன் நன்றியை வெளியிட்டார் மிமி.
Comments are closed.