இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி எடுக்கப்பட்ட எரேமியா 31:10-ல்,
“ஆயர் தம் மந்தையைக் காப்பது போல் ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.” என கூறப்பட்டுள்ளது.
அலகையின் சூழ்ச்சிகளிலிருந்து ஆண்டவர் நம்மைக் காத்திட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டது போல நாம்
இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொண்டு அதன்படி நடந்து, நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
நம் அன்னை மரியாவின் பெற்றோர்களான இன்றைய புனிதர்களான புனித சுவக்கின், புனித அன்னாள் ஆகிய இருவரும் நமது குடும்பங்களில் உள்ள வயதான தாத்தா, பாட்டி ஆகியோரின் பாதுகாவலர்களாவர்.
மன நிம்மதியற்று இருக்கும் முதியோர், தனிமையில் இருக்கும் வயதானவர்கள் ஆகியோரின் உடல், உள்ள சுகத்திற்காக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.