இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்

““இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்.” என ஆண்டவர் கூறியதை நாம் வாசித்தோம்.

திருச்சபையில் குருக்களின் மறையுரைகள் தூய ஆவியின் தூண்டுதலினால் பொது நிலையினரிடையே சிறந்த தாக்கத்தை உண்டாக்கிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்

“ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

பல மடங்கு விளைச்சலைத் தரும் நல்ல விதைகளாக நாம் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இந்த நாள் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழிநடத்துதல் கிடைக்கப் பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இயேசுவின் திரு இரத்தத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த ஜூலை மாதத்தில் இயேசுவின் திரு இரத்தம் நம் அனைவரின் பாவங்களையும் சுத்திகரித்து நம்மைத் தூய்மையாக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.