ஜூலை 15 : நற்செய்தி வாசகம்

அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34- 11: 1

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.

இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————–

“நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்”

பொதுக் காலத்தின் பதினைந்தாம் வாரம் திங்கட்கிழமை

I எசாயா 1: 11-17

II மத்தேயு 10: 34-11:1

“நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்”

உதவியும் கைம்மாறும்:

இளைஞன் ஒருவன் ஒரு பெரிய காடு வழியாகச் சென்றுகொண்டிருந்தான். வழியில் ஒரு குழியில் மாடு ஒன்று மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. இளைஞன் அதைப் பார்த்தான். இருந்தும், அவன் அதை மேலே கொண்டு வர நினைக்காமல், அதன்மீது ஏறிச் சென்று குழியின் மறுபக்கத்தை அடைந்தான். அங்கே தங்க நாணயங்கள் குவியலாகக் கிடப்பதைக் கண்டு அவன் இன்னும் ஆச்சரியப்பட்டான்.

சிறிதுநேரம் கழித்து அந்த வழியாக ஒரு பெரியவர் வந்தார். அவர் மாடு குழியில் விழுந்து கிடப்பதைக் கண்டு, அதை மேலே கொண்டு வர முயற்சி செய்தார். ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் அவரால் மாட்டினை வெளியே கொண்டு வர முடிந்தது. அதற்குள் அவருடைய உடலெல்லாம் காயங்களும் சிராய்ப்புகளும் ஏற்பட்டன.

இளைஞன் சற்றுத் தொலைவிலிருந்து நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்தான். ‘மாட்டின்மீது ஏறி மிதித்து வந்த எனக்குத் தங்கக் காசுகள்! அதற்கு உதவச் சென்ற பெரியவருக்கு உடல் முழுவதும் காயங்களா?” என்ன இது? ஒன்றும் புரியவில்லையே!’ என்று அவன் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான்.

அன்று இரவு கடவுள் அவனுக்குக் கனவில் தோன்றினார். “மாட்டின்மீது ஏறிச் சென்ற உனக்குத் தங்கக் காசுகளா? என எண்ண வேண்டாம். அந்தத் தங்கக் காசுகள் அழிந்து போகக் கூடியவை. பெரியவர் மாட்டிற்கு உதவும்போது காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவர் ஒரு வாயில்லா ஜீவனுக்குத் செய்த உதவிக்கு விண்ணகத்தில் நிச்சயம் கைம்மாறு உண்டு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார் கடவுள்.

ஆம், நாம் செய்யும் நன்மைக்கு அல்லது உதவிக்கு விண்ணகத்தில் கைம்மாறு உண்டு. அதைத்தான் மேலே உள்ள கதை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய இறைவார்த்தை நாம் நன்மை செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

Comments are closed.