ஜூலை 1 : நற்செய்தி வாசகம்
என்னைப் பின்பற்றி வாரும்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22
இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
சீடத்துவமும் துன்பமும்
பொதுக் காலத்தின் பதிமூன்றாம் வாரம் திங்கட்கிழமை
I ஆமோஸ் 2: 6-10, 13-16
II மத்தேயு 8: 18-22
சீடத்துவமும் துன்பமும்
துன்பமே சீடத்துவத்தின் முத்திரை:
ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த காலத்தில் அங்குள்ள மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்தவர் டீட்ரிச் பான்ஹோபர் (Dietrich Bonhoeffer) என்ற மறைப்பணியாளர். இதன் நிமித்தம் இவருடைய மனைவியும் பிள்ளைகளும் அச்சுறுத்தப்பட்டார்கள்; இவரும் வதைமுகாமில் தள்ளப்பட்டுப் பலவிதமான சித்திரவதையை அனுபவித்தார். அப்படியிருந்தும் இவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை சிறிதும் இழக்கவில்லை.
இவர் மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவிக்கையில் அடிக்கடி சொல்லும் சொற்றொடர், “துன்பமே சீடத்துவத்தின் முத்திரை”. இச்சொற்றொடருக்கேற்ப இவர் 1945 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார். இவ்வாறு இவர், கிறிஸ்துவுக்காக அனுபவித்த துன்பங்களின் மூலம், தான் இயேசுவின் உண்மையான சீடர் என்பதை நிரூபித்தார்.
ஆம், இயேசுவின் சீடர் அல்லது அவரைப் பின்தொடர்பவர் துன்பங்களை ஏற்கத் தயாராக இருக்கவேண்டும். அதையே டீட்ரிச் பான்ஹோபரின் வாழ்க்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய இறைவார்த்தை சீடத்துவ வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
Comments are closed.