இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 24.05.2024

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன.” என திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்.

இவ்வுலகில் அழியக் கூடிய செல்வத்தைத் தேடி ஓடாமல் அழியா செல்வமாகிய நிலை வாழ்விற்குத் தேவையான தகுதிகளை அடைய நாம் ஆர்வமுடன் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 49:16-17-ல்,

“சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை.” என திருப்பாடல் ஆசிரியர் கூறியதை நாம் வாசித்தோம்.

இறுதி நாள் தீர்ப்பிற்கு நாம் செய்த நன்மைகளால் விளைந்த புண்ணியங்களை மட்டுமே நாம் எடுத்துச் செல்ல இயலும் செல்வங்களை அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றைய நற்செய்தியில், “இரு கையுடையவராய் நரகத்துக்குத் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது நல்லது.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

தூய வாழ்விற்கு இடையூறான பாவத்திற்குக் காரணமான அனைத்து செயல்களையும் நாம் விட்டுவிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

மறைசாட்சியாக மரித்த கன்னியரான இன்றைய புனிதர் ஜுலியா சித்திரவதைத் துன்பங்களுக்கு ஆளாவோரின் பாதுகாவலராவார்.

சித்திரவதைக்கு உள்ளாகும் எண்ணற்ற அப்பாவிகள் துன்பங்களிலிருந்து விடுதலை பெற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.