மே 24 : நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————————

“இருவர் அல்ல, ஒரே உடல்”

பொதுக்காலத்தின் ஏழாம் வாரம் வெள்ளிக்கிழமை

I யாக்கோபு 5: 9-12

II மாற்கு 10: 1-12

“இருவர் அல்ல, ஒரே உடல்”

பெண் தேடும் படலம்:

ஒருவர் திருமண வயதைக் கடந்து, பல ஆண்டுகள் ஆனபிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு அறிமுகமான ஒருவர் அவரிடம், “நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர், “பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. அதனால்தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன்” என்றார்.

“இத்தனை ஆண்டுகளில் பொருத்தமான பெண் என்று ஒருவர் கூட உங்களுக்குக் கிடைக்க வில்லையா?” என்று அறிமுகமானவர் அவரிடம் கேட்டதற்கு, அவர், “பொருத்தமான பெண்கள் கிடைத்தார்கள். ஆனால், அவர்களுக்கு நான் பொருத்தமில்லை என்று சொல்லிவிட்டு, அவர்கள் வேறு பொருத்தமான ஆளைத் தேடித் போய்விட்டார்கள்” என்று மிக வருத்தத்தோடு சொன்னார்.

வேடிக்கையான நிகழ்வாக இது இருந்தாலும், சொல்லும் செய்தி மிகவும் அருமையானது. ஆம், மணவாழ்க்கை என்பது குறைகளே இல்லாத வாழ்க்கைத் துணையோடு வாழ்வதல்ல. மாறாகக் குறைகளோடு ஒருவரை ஏற்றுக்கொண்டு வாழ்வது. அத்தகைய செய்தியை இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இயேசு, மக்கள் நடுவில் அடைந்த பெயரும் புகழும் செல்வாக்கும் பரிசேயர் எதிர்பார்த்திராதது. அதனால் அவர்கள் இயேசுவை எப்படியாவது பேச்சில் சிக்க வைக்கவேண்டும் என்ற சூழ்ச்சியில் இறங்குகின்றார்கள். அதற்காக அவர்கள் கேட்கும் கேள்விதான். “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்பது.

பரிசேயர் இயேசுவிடம் இக்கேள்விக் கேட்கும் நிலப் பகுதியை ஏரோது அந்திப்பா ஆண்டு வந்தான். இவன்தான் தன் சகோதரனின் மனைவியான ஏரோதியாவோடு வாழ்ந்து வந்தவன். இது தவறு என்று சுட்டிக்காட்டியதற்காகத் திருமுழுக்கு யோவானைக் கைது செய்து, இவன் சிறையில் அடித்திருந்தான். இதையெல்லாம் நன்கு அறிந்த பரிசேயர், கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்ற கேள்வியை இயேசுவிடம் கேட்கின்றார்கள். பரிசேயர் கேட்ட கேள்வியை முறை அல்லது முறையில்லை என்று எப்படிப் பதில் சொன்னாலும் இயேசுவுக்குப் பிரச்சனை வரும். ஏனெனில், இயேசுவின் காலத்தில் சிலர், சரியான காரணம் இல்லாமல் ஒருவர் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையில்லை என்று சொல்லி வந்தனர். அதேநேரத்தில், இயேசு பரிசேயர் கேட்ட கேள்விக்கு “முறையில்லை” என்று சொன்னால் ஏரோதுவின் எதிர்ப்பு உள்ளாக வேண்டி வரும்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் இயேசு பரிசேயர்கள் கேட்ட கேள்விக்கு முறை அல்லது முறையில்லை பதில் சொல்லிக்கொண்டிருக்காமல் தொடக்க நூல் 2: 24 இல் வரும் இறைவார்த்தையைக் கொண்டு பதில் தருகின்றார். கணவனும் மனைவியும் ஓருடலாய் இருக்கவேண்டும் என்பதுதான் கடவுளின் திருவுளம். அதையே இயேசு பரிசேயருக்குப் பதிலாகத் தருகின்றார்.

மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் வராமல் இராது. அவற்றைப் பொறுத்துக் கொள்ளவும், ஒருவர் மற்றவரைப் பற்றி முறையிடாமலும் இருக்கவேண்டும் என்று இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு கூறுகின்றார். ஆகையால், ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாமல், ஒருவர் மற்றவர்மீது உள்ளார்ந்த அன்பு கொண்டு வாழ்ந்திட்டால் மணமுறிவு என்ற பேச்சு இடமில்லை.

Comments are closed.