மே 17 : நற்செய்தி வாசகம்
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19
தம் சீடர்களுக்குத் தோன்றி, இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின் தொடர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————-
என்மீது அன்பு செலுத்துகிறாயா?
பாஸ்கா காலத்தின் ஏழாம் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 25: 13-21
திருப்பாடல் 103: 1-2, 11-12, 19-20
II யோவான் 21: 15-19
என்மீது அன்பு செலுத்துகிறாயா?
அன்பும் கீழ்ப்படிதலும்
கடவுளை அன்பு செய்வதற்குப் பல வழிகள் இருந்தாலும், அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைவிடவும் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவோடு உயிர்த்த ஆண்டவர் தனியாகப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இன்று நாம் நற்செய்தி வாசகமாக வாசிக்கக்கேட்ட இறைவாக்குப் பகுதியில் அது கிடைக்கின்றது. பேதுரு இயேசுவை மறுதலித்ததை நினைத்துப் பல முறை கண்ணீர் சிந்தி அழுதார். அப்படிப்பட்டவர் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்பதற்கான சூழலும் இல்லாமலேயே இருந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு அதனை வேறு விதமாக ஏற்படுத்தித் தருகின்றார்.
சீமோன் பேதுருவிடம் தனியாகப் பேசும் இயேசு, “நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகின்றாயா?” என்று கேட்கின்றார். இக்கேள்வியை இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம். முதலாவதாக, மற்றவர்களை விட மிகுதியாக என் மீது அன்பு செலுத்துகின்றாயா? என்றும், இரண்டாவதாக, மற்றவைகளை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகின்றாயா? என்றும் எடுத்துக் கொல்லாம். பேதுரு மற்றவர்களைவிடவும், மற்றவைகளை விடவும் இயேசுவை மிகுதியாக அன்பு செய்தார். அந்த அன்பின் வெளிப்பாடுதான், அவரது ஆடுகளை மேய்த்து, அவருக்காகத் தம் உயிரைத் தந்தது.
இன்றைய முதல் வாசகத்தில் பவுல் இயேசுவை எவ்வாறு அன்பு செய்தார் என்பதையும் அதன் பொருட்டு, அவர் எத்தகைய துன்பங்களை அனுபவித்தார் என்றும் வாசிக்கின்றோம். இயேசுவை நாம் அன்பு செய்யவேண்டும் ஏனெனில், அவர் இன்றைய நாளில் நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 103 இல் சொல்லப்படுவது போல், விண்ணகத்தில் தம் அரியணையை நிலை நிறுத்தியுள்ளார்.
ஆகையால், நாம் இயேசுவை அன்பு செய்வோம். அந்த அன்பை அவரது கட்டளையைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்துவோம்.
அன்பை எப்படி வெளிப்படுத்துவது?
இருபதாம் நூற்றாண்டில் கனடாவில் தோன்றிய ஒரு மிகப்பெரிய நற்செய்திப் பணியாளர் ஜோனத்தான் கோபோர்த் (Jonathan Goforth). இவர் நற்செய்திப் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, இவர் தம் பெற்றோரோடு இருக்கையில், இவரது தந்தை புதிதாக ஒரு பண்ணை நிலத்தை வாங்கி, அதைப் பார்த்துக் கொள்ளுமாறு இவரிடம் கேட்டுக் கொண்டார். இவரும் அந்த பண்ணை நிலத்தை நன்றாக உழுது பயிரிட்டார்.
பயிர்கள் நன்றாக விளைந்து அறுவடைக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, இவர் தன் தந்தையை அழைத்து, நிலத்தைப் பார்வையிடச் சொன்னார். அவரும் வந்து நிலத்தை பார்த்துவிட்டு இவரிடம் எதுவும் சொல்லாமல், ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்துவிட்டுப் போனார்.
இது குறித்துப் பின்னாளில் இவர் குறிப்பிடும்போது, “என் தந்தையின் முகத்தில் தெரிந்த புன்னகை மூலம் நான் என் தந்தை என்னிடம் கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்திருக்கின்றேன் என்பதைத் தெரிந்து கொண்டேன். அது போலவே, கடவுள் நம்மிடம் கொடுக்கும் பணியினைச் சிறப்பாக செய்யும்போது, அவர் மகிழ்கின்றார். அவரை நாம் அன்பு செய்கின்றோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கடவுள் நாம் அன்பு செய்கின்றோம் என்பதன் வெளிப்பாடுதான், அவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பது. கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்து, அவரை அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.
Comments are closed.