மே 10 : நற்செய்தி வாசகம்
உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23a
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————–
“உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 18: 9-18
திருப்பாடல் 47: 1-2, 3-4, 5-6 (7a)
II யோவான் 16: 20-23a
“உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”
துயரத்திற்கு நடுவில் ஆண்டவரின் துணை
இன்றைக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்களைப் போன்று இயேசு பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசவில்லை. அவர் உண்மையை மட்டுமே பேசினார். அதிலும் குறிப்பாக, அவர் தன்னைப் பின்தொடர்ந்து வர விரும்பியவர்களிடம், தன்னைப் பின்தொடர்வதால் சிலுவைகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளவேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்தார்.
இன்றைய நற்செய்தியில் அவர், “நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும்” என்கிறார். இவ்வாறு சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து, “நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்கிறார்.
இயேசுவைப் பின்தொடர்வதால் ஒருவர் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தாலும், அந்தத் துன்பங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக மாறும் என்பதுதான் இயேசு உணர்த்தும் செய்தி.
இயேசுவின் இவ்வார்த்தைகளை எண்பிக்கும் வகையில் இருக்கின்றது இன்றைய முதல் வாசகம். மக்களிடமிருந்து எதிர்ப்பு, சவால், ஆபத்து என்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த பவுல் கொரிந்து நகரில் இருக்கும்போது, அவருக்குத் தோன்றும் ஆண்டவர், “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே” என்று நம்பிக்கையூட்டுகின்றார். இவ்வாறு கடவுள் தம் அடியார்களைக் கைவிடாமல், அவர்களது துன்பத்தை மகிழ்ச்சியாக மாற்றிக் காட்டுகின்றார்.
கடவுளால் எப்படி நம்முடைய துன்பத்தை இன்பமாக மாற்ற முடிகின்றது என்கிற கேள்விக்கு இன்றைய நாளில் நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 47 நமக்குப் பதில் தருகின்றது. கடவுள் சாதாரணமானவர் அல்லர். அவர் அனைத்துலகின் வேந்தர். அப்படிப்பட்டவர் நிச்சயம் நம் துன்பத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். அதனால் நாம் அவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது பணியைத் தொடர்ந்து ஆற்றுவோம்.
ஏன் புடமிடபபடுகின்றோம்?
ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர், மலாக்கி 3:3 இல் இடம்பெறுகின்ற, “அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துவோர் போலும் அமர்ந்திருப்பார்” என்ற இறைவார்த்தைக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
மாணவர்கள் யாவரும் ஆசிரியர் சொன்னதைப் புரிந்தவர்கள்போல் கேட்டுக்கொண்டிருந்தபோது, ஒரே ஒரு சிறுமி மட்டும் புரியாமல் விழித்தாள். அது தொடர்பாக அவள் ஆசிரியரிடம் கேள்வி கேட்டபோதும், ஆசிரியர் அதற்கு விளக்கம் அளித்தபோதும் அவளால் புரிந்துகொள்ள கொள்ள முடியவில்லை. இதனால் அவள் வருத்தத்தோடு வீடு திருப்பிக் கொண்டிருந்தாள்.
வழியில் அவர் வெள்ளிக் கொல்லனைக் கண்டாள். அவரிடம் அவள், “வெள்ளியை எப்படிப் புடமிடுவீர்கள்?” என்றாள். “நெருப்பை மூட்டித் தான்” என்று அவர் பதில் சொன்னதும், “வெள்ளி புடமிடப்பட்டுவிட்டது என்பதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள். உடனே அவர், “வெள்ளியில் என் முகம் தெரியும். அப்போது வெள்ளி புடமிடப்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்வேன்” என்றார்.
இப்போது அவளுக்கு வெள்ளியைப் புடமிடமிடுவது எப்படி என்று தெரிந்தது. அதே நேரத்தில், கடவுள் நம்மை அவருக்கு உகந்தவராய் மாற்றத்தான் துன்பங்கள் வழியாகப் புடமிடுகின்றார் என்பதை அறிந்துகொண்டாள்.
துன்பங்கள் வழியாக நாம் புடமிடப் படுகின்றோம் எனில், கடவுள் நமக்கு மகிழ்ச்சியான வாழ்வினைத் தரப்போகிறார் என்பதே அர்த்தம். ஆகையால், நமது வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்வோம்.
ஆண்டவரின் வார்த்தை
Comments are closed.