இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 05.05.2024

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றைய ஞாயிறு திருப்பலி இரண்டாம் வாசகத்தில், “, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.” என திருத்தூதர் யோவான் கூறுவதை கண்டோம்.

நாம் அனைவரும் எதையும் எதிர்பார்க்காத அன்பை பிறரிடம் செலுத்த வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்

“நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

இறைமகன் இயேசுவின் பெயரால் நாம் கேட்பதை தந்தை நமக்கு அருள்வார். ஆனால் அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டளையை நிறைவேற்றும் போதுதான் தந்தை நமக்கு அதை அருள்வார் என்ற உண்மையை நாம் உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

பொதுத் தேர்வுகளை எழுதிவிட்டு தேர்வு முடிவுகளை எதிர் நோக்கியிருக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இன்று ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க இயலாமலும், இறைவனின் திருவுடலை வாங்க இயலாமல் இருப்பவர்களுக்காகவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.