மே 6 : நற்செய்தி வாசகம்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26- 16: 4

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன். உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது. தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————-

“நீங்களும் சான்று பகர்வீர்கள்”

பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் திங்கட்கிழமை

I திருத்தூதர் பணிகள் 16: 11-15

திருப்பாடல் 149: 1-2, 3-4, 5-6a, 9b (4a)

II யோவான் 15: 26-16: 4

“நீங்களும் சான்று பகர்வீர்கள்”

வாழ்வால் அறிவிப்போம்

தங்களை விட்டு இயேசு பிரியப் போகிறார் என்பதை உணர்ந்த சீடர்கள் கலக்க மடைந்தார்கள். அப்போது அவர்களுக்கு நம்பிகையூட்டும் வகையில் இயேசு பேசுகின்ற வார்த்தைகள்தான் இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 149 இல் அதன் ஆசிரியர், “ஆண்டவர் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்” என்கிறார். இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தரும் வகையில், இன்றைய நற்செய்தியில் இயேசு, “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்” என்கிறார்.

இயேசு சொல்லும் இவ்வார்த்தைகள், சீடர்கள் தான் அவர்களை விட்டுப் பிரிந்து செல்வதால் கலங்கத் தேவையில்லை. மாறாக, அவர்களுக்குத் தூய ஆவியார் துணையாக இருப்பதால், அவரின் துணையைக் கொண்டு சான்று பகர முடியும் என்ற உண்மையை உணர்த்துகின்றன.

முதல் வாசகத்தில் பவுல் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டவராய் தியத்திராவிற்குச் சென்று, அங்கிருந்த லீதியாவிற்கு இயேசுவைப் பற்றிச் சான்று பகர்கின்றார். இதனால் அவர் இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்கின்றார். இவ்வாறு பவுலைப் போன்று நாம் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தால் பலரும் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வார்கள் என்பது உறுதி.

எனவே, நாம் இயேசுவைப் பற்றி நமது வாய் மொழியால் மட்டுமல்ல, வாழ்வாலும் சான்று பகர்ந்து அவரது உண்மையான சீடர்களாய் வாழ்வோம்.

மறு கிறிஸ்துவாய் வாழுங்கள்

ஒரு கல்லூரியில் இந்து சமயத்தைச் சார்ந்த ஒரு பேராசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் நடுவில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த மாணவன் ஒருவன் இருப்பதை அறிந்தார்.

உடனே அவர் அந்த மாணவரிடம், “கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மட்டும் மறு கிறிஸ்துவாக வாழத் தொடங்கினால், நாளைக்கே இந்த நாடு உங்கள் காலடியில் கிடக்கும்” என்றார்.

பேராசிரியர் சொன்ன வார்த்தைகள்தான் எத்துணை உண்மையானவை! கிறிஸ்தவர்கள் பெயருக்குக் கிறிஸ்தவர்களாய் வாழாமல், பெயர் சொல்லும் கிறிஸ்தவர்களாய் இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்தால் ஏராளமானோர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வர் என்பதில் எந்தவோர் ஐயமுமில்லை.

Comments are closed.