மார்ச் 11 : நற்செய்தி வாசகம்

நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.

நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54

அக்காலத்தில்

இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.

கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————

“இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா!”

தவக் காலத்தின் நான்காம் வாரம் திங்கட்கிழமை

I எசாயா 65: 17-21

II யோவான் 4: 43-54

“இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா!”

கண்ணீர்த்துளிகளின் சந்திப்பு:

இரண்டு கண்ணீர்த் துளிகள் சந்தித்துக் கொண்டன. அப்போது முதலாவது கண்ணீர்த் துளியைப் பார்த்து இரண்டாவது கண்ணீர்த் துளி, “நீ யார்?” என்று கேட்டது. அதற்கு முதலாவது கண்ணீர்த்துளி, “நான் தனது காதலனை விபத்தில் பறிகொடுத்த காதலியின் கண்ணிலிருந்து வழிந்து வந்த கண்ணீர்த் துளி” என்றது.

பின்னர் இரண்டாவது கண்ணீர்த் துளியைப் பார்த்து முதலாவது கண்ணீர்த் துளி, “ஆமாம், நீ யார்?” என்று கேட்டதற்கு, இரண்டாவது கண்ணீர்த்துளி, “நானா…! பல மாதங்களாகப் பிரிந்திருந்த காதலனும் காதலியும் சேர்ந்தபோது, காதலனின் கண்ணிலிருந்து வந்த ஆனந்தக் கண்ணீர்த் துளி” என்று புன்னகையோடு சொன்னது.

ஆம், மனிதன் அழுகின்றபோதும் சிரிக்கின்றபோதும் கண்ணீர் விடுகின்றான். இவ்வாறு கண்ணீர் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தை, ‘இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

மெசியாவின் வருகையின்போது என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றிப் பேசுகிறது இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம். அந்நாளில் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் படைக்கப்படும் என்று சொல்லும் இறைவாக்கினர் எசாயா, “இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா” என்கிறார்.

இறைவாக்கினர் எசாயா, மெசியாவைப் பற்றி முன்னறிவிக்கும் இவ்வார்த்தைகள் இன்றைய நற்செய்தி வாசகத்தோடு அப்படியே பொருந்திப் போகின்றன. நற்செய்தியில் இயேசு இறக்கும் தறுவாயில் இருந்த அரசு அலுவலரின் மகனை நலமாக்குகின்றார். இந்த நிகழ்வும் மத்தேயு நற்செய்தியில் வரும் நிகழ்வும் (மத் 8:5-13) ஒன்றுபோல் தோன்றலாம். ஆனால், மத்தேயு நற்செய்தியில், இயேசு நூற்றுவத் தலைவரின் பணியாளரை நலமாக்குகின்றார். யோவான் நற்செய்தியிலோ அரசு அலுவலவரின் மகனை நலமாக்குகின்றார். மேலும் நூற்றுவத் தலைவரோ ஒரு பிறவினத்தார். அரசு அலுவலரோ ஒரு யூதர். இத்தகைய காரணங்களால் இரண்டும் வேறு வேறு நிகழ்வு என்று சொல்லலாம்.

இயேசு அரசு அலுவலரின் மகனுக்கு நலமளித்தன் மூலம் ‘அழுகையோ கூக்குரலோ கேட்காமல் செய்துவிடுகின்றார். இதனால் அரச அலுவலரின் குடும்பமே இயேசுவில் நம்பிக்கை கொள்கின்றது. நாமும் இயேசுவிடமிருந்து அருளையும் ஆசியையும் பெறுவதற்கு அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ முயற்சி செய்வோம்.

Comments are closed.