இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றைய ஞாயிறு திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட விடுதலைப் பயண நூலில்,

“உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே”

ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாம் வாழ்வில் கடைபிடித்து ஒழுக வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றைய பதிலுரைப்பாடல் பல்லவியில், “ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.” என வாசிக்கின்றோம். நித்திய வாழ்விற்கான வழி நம் இறைவார்த்தையை கடைபிடிப்பதன் மூலம் மட்டுமே காணலாம் என்ற உண்மையை நாம் முற்றிலும் உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

நமது கத்தோலிக்கத் திருத்தலங்கள் வணிகரீதியாக மாறுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இன்று ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க இயலாமலும், இறைவனின் திருவுடலை வாங்க இயலாமல் இருப்பவர்களுக்காகவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்

Comments are closed.