தன் பிறரன்புச் செயல்கள் வழியாக பயிற்சியளித்த இயேசு

உரோம் நகருக்கு அருகேயுள்ள Sacrofano என்னுமிடத்தில் Fraterna Domus மையத்தில் ‘இன்முக வரவேற்பிற்கான இருப்பிடம்’ என்ற தலைப்பிலான கூட்டத்தில் கலந்துகொண்டோரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Fraterna Domus மையத்தின் பல பணிகளைக் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை அவர்கள், அந்த கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு மூன்று கருத்துக்களை எடுத்துரைத்து உரையாற்றினார்.

ஏழ்மையான நிலையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளை வரவேற்று அவர்களுக்கு பணிபுரிவது நம் முதல் கடமை என தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற தூய பவுலின் வார்த்தைகளை நினைவூட்டினார்.

இரண்டாவது கருத்தாக, இயேசு ஏழைகள் மற்றும் நோயுற்றோரோடு நெருக்கமாக இருந்ததை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, தன் சீடர்களுக்கு இது குறித்து இயேசு போதிக்கவில்லை, மாறாக தன் செயல்கள் வழியாக பயிற்சியளித்தார் எனக் கூறினார்.

கிறிஸ்து எவ்வாறு மக்களை வரவேற்றார், எவ்வாறு நெருக்கமாக இருந்தார், எவ்வாறு இரக்கமும் கனிவும் காட்டினார் என்பதை நேரடியாகக் கண்டு சீடர்கள் கற்றுக்கொண்டனர் என மேலும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சீடர்கள் மட்டுமல்ல, அதற்கு பின்வந்த எண்ணற்ற புனிதர்களும் தங்கள் வாழ்வால் ஏழைகளுக்கும், துயருறுவோருக்கும், வாழ்வில் ஓரங்கட்டப்பட்டோருக்கும் சேவையாற்றுவதில் இறைவனைப் பின்பற்றினர் என எடுத்துரைத்த திருத்தந்தை, தன் மூன்றவாது கருத்தாக, நற்செய்தியில் ஏழைகள், மற்றும் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய மக்களின் இடம் குறித்து எடுத்துரைத்தார்.

Comments are closed.