நாம் அனைவரும் அமைதிக்கான முழக்கத்தை முன்னெடுப்போம்!

தனிமையும் ஒதுக்கப்படுத்தலும் நிறைந்த இவ்வுலகில், நம் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டவர்கள் நல்ல மேய்ப்பரின் நெருக்கத்தையும், சொந்த தந்தைக்குரிய நம் அக்கறையையும், உடன்பிறந்த உறவின் அழகையும், கடவுளின் கனிவிரக்கத்தையும் உணருவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 28, இப்புதனன்று, சிலிசியாவின் அர்மினிய கத்தோலிக்க வழிபாட்டு முறையின் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் அன்பான மக்களின் குழந்தைகளுக்கு ஆயர்களாகிய உங்களின் உடனிருப்புத் தேவைப்படுகிறது என்றும் உரைத்தார்.

அன்பான சகோதரர்களே, உங்கள் திருஅவைக்கு நாளைய ஆயர்களை வழங்குவது, ஆயர் பேரவையின் மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றாகும் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும், அப்போதுதான் அவர்கள் மந்தைக்குத் தங்களை முழுதுமாக அர்ப்பணிப்பவர்களாகவும், மேய்ப்புப் பணியில் உண்மையுள்ளவர்களாகவும், தனிப்பட்ட சுயநல இலட்சியத்தால் ஆட்கொள்ளப்படாதவர்களாகவும் இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஓர் ஆயர் என்பவர், புதிய பணிகளையும் அல்லது, பதவி உயர்வுகளையும் பெறுவதற்காக அவர் நேரத்தை வீணடிக்கும்போது, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மேய்ப்புப் பணிக்குரிய செயல்களில் அவர் அக்கறைகாட்ட மறக்கிறார் என்று கூறிய திருத்தந்தை, ஆயர்கள் சந்தையில் வாங்கப்படுவதில்லை; கிறிஸ்துவே அவர்களைத் தம்முடைய திருத்தூதர்களின் வழித்தோன்றல்களாகவும், அவருடைய மந்தையின் மேய்ப்பர்களாகவும் தேர்ந்தெடுக்கிறார் என்றும் தெரிவித்தார்.

நம் பராமரிப்பில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தவர்களாகவும், சில வேளைகளில் பரந்த நாடுகளில் வாழும் அவர்களைச் சந்திப்பது மிகவும் கடினமாகவும் இருக்கும் என்பதைத் தான் அறிந்துள்ளதாகக் கூறிய திருத்தந்தை, ஆனாலும் கூட, திருஅவை என்பது ஓர் அன்பான தாய், அவர்களைச் சென்றடைவதற்கும், கடவுளின் அன்பை அவர்களின் சொந்த திருஅவையின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு வழங்குவதற்கும், சாத்தியமான எல்லா வழிகளையும் அது தேடாமல் இருக்க முடியாது என்றும் விளக்கினார்.

Comments are closed.