பிப்ரவரி 29 : நற்செய்தி வாசகம்

இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

பிப்ரவரி 29 : நற்செய்தி வாசகம்

இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில்

இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.

அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார். அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார். அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார். ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்

தவக் காலத்தின் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை

I எரேமியா 17: 5-10

திருப்பாடல் 1: 1-2, 3, 4, 6 (திபா 40: 4a)

II லூக்கா 16: 19-31

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்

உங்கள் நம்பிக்கை யார்மீது?

‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’ என்பார்கள். அந்த அடிப்படையில், இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கின்ற உவமையில் வருகின்ற ஏழை இலாசர் ஆண்டவரை மட்டுமே நம்பியிருந்தார். ஆண்டவரும் அவருக்குத் துணையாய் இருந்தார்.

திருவிவிலிய அறிஞர்கள் இவரைப் பற்றிக் கூறுகின்றபோது, “இயேசு சொல்லும் உவமைகளில் வரும் மனிதர்களில் இலாசரைத் தவிர்த்து வேறு யாருக்குமே பெயர் இல்லை. எனில், இலாசர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் கிடையாது. அவர் இரத்தமும் சதையுமாக பாலஸ்தீனில் வாழ்ந்தவர். அப்படிப்பட்டவரையே இயேசு தம் உவமையில் பயன்படுத்தினார்” என்பர். இலாசர் ஆண்டவரை நம்பியிருந்ததால், அவர் விண்ணகம் செல்கின்றார். இவ்வாறு, “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர், ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே” (லூக் 6: 20) என்ற இறைவார்த்தை நிறைவேறுகின்றது.

ஏழை இலாசருக்கு நேர்மாறாக வாழ்ந்தவர் செல்வந்தர். இவர் தன்னிடம் இருந்த செல்வத்தின்மீது மட்டுமே நம்பிக்கை வைத்து வாழ்ந்தார். அச்செல்வம் அவரது கண்ணை மறைத்ததால், அவரால் தன் வீட்டு வாயிலருகே இருந்த ஏழை இலாசரைக் கண்டுகொள்ள முடியாமல் போயிற்று. முடிவில் அவர் பாதாளம் செல்ல வேண்டியதாயிற்று.

இயேசு இந்த உவமையைப் பணத்தாசை பிடித்த பரிசேயர்களை நோக்கிச் சொன்னாலும்கூட, நாம் பணத்தின்மீது அல்ல, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்றபோதுதான் நிலைவாழ்வடைய முடியும் என்ற செய்தியைத் தருகின்றது.

இன்றைய முதல் வாசகமும், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் ஒன்றும், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோர் பேறுபெற்றோர் என்றும், அவர்கள் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போன்று இருப்பார்கள் என்றும் கூறுகின்றது. அதே வேளையில், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழாமல், மனிதர்மீது நம்பிக்கை வைத்து வாழ்பவர்களே பாலை நிலத்துப் புதர்ச் செடி போன்று பருவ காலத்திலும் பயன் தராமல் இருப்பார்கள் என்றும் கூறுகின்றது.

ஒருவர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்பதற்கு அவர் ஆண்டவரது திருச்சட்டத்தை இரவும் பகலும் சிந்திப்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், நாம் கடவுளின் வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்து, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம். பேறுபெற்றோர் கூட்டத்தில் இடம்பெறுவோம்.

ஆண்டவரில் நம்பிக்கை வைத்ததால் வெற்றி

குத்துச் சண்டை என்றதும் உடனே நம்முடைய நினைவு வருபவர் மைக் டைசன். பல ஆண்டுகளாகக் குத்துச் சண்டைப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இவரை வெற்றிகொண்டு வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த ஒருவர் இருக்கின்றார். அவர்தான் எவாண்டர் ஹோலிபீல்ட் (Evander HolyField).

எவாண்டர் ஹோலிபீல்ட், மைக் டைசனைப் போட்டியில் எதிர்கொள்வதற்குச் சில நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருந்தது. அவர், ‘மைக் டைசனைப் போட்டியில் எப்படி எதிர்கொள்ளப் போகிறேனோ?’ என்ற பதற்றத்தில் இருந்தபோது, அவருடைய மனைவி, “கடவுளால் உங்களுக்கு உங்கள் எதிராளியைப் போட்டியில் எதிர்கொள்ள ஆற்றல் தரமுடியாது என்று நினைக்கின்றீர்களா? அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் எவ்வளவு பெரிய மனிதரையும் போட்டியில் எதிர்கொள்ள உங்களுக்கு ஆற்றலைத் தருவார்” என்று திடப்படுத்தினார்.

போட்டி நாள் வந்தது. அரங்கில் திரண்டிருந்த யாவருமே மைக் டைசன்தான் போட்டியில் வெற்றி பெறுவார் என்று நினைத்தார்கள். ஆனால் எவாண்டர் ஹோலிபீல்ட்டின் மனைவி தன் கணவர் நிச்சயம் போட்டியில் வெற்றி பெறுவார் என்று நம்பினார். அவர் நம்பியது போன்ற எவாண்டர் ஹோலிபீல்ட் மைக் டைசனை வீழ்த்தி, போட்டியில் வெற்றி பெற்றார்.

Comments are closed.