இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.” என ஆண்டவர் இறைவாக்கினர் எசாயா நூலில் கூறுகிறார்.
ஆற்றல்மிக்க இறைவார்த்தையைக் கேட்டும், அதற்கு நாம் பலன்தராமல் இருக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 34:18-ல், “உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
எல்லாம் இழந்து, விரக்தியில் வாழ்வின் விளிம்பில் நிற்கும் தற்கொலை எண்ணம் கொண்ட அனைவரும் தன் அருகில் ஆண்டவர் இருக்கிறார் என உணர்ந்து ஆறுதல்பெற வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
ஒவ்வொரு முறையும் நாம் கைகளை விரித்து இயேசு கற்பித்த செபத்தை சொல்லும்போது அதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து சொல்கின்றோமா? என சிந்திக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
நோய்களுக்கு எதிரான பாதுகாவலர்களும், இன்றைய புனிதர்களுமான புனித ஜசிந்தா மற்றும் புனித ஃப்ரான்சிஸ்கோ மார்ட்டோ வழியாக நோயுற்றவர்கள் குணமாக வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்கவும், காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கவும் இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Comments are closed.