பிப்ரவரி 16 : நற்செய்தி வாசகம்
மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15
யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————————–
“அப்போது உங்கள் ஒளி விடியல் போல் எழும்”
திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் வெள்ளிக்கிழமை
I எசாயா 58: 1-9a
திருப்பாடல் 51: 1-2, 3-4a, 16-17 (17b)
II மத்தேயு 9: 14-15
“அப்போது உங்கள் ஒளி விடியல் போல் எழும்”
இதுவன்றோ உண்மையான வழிபாடு!
நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தி முயற்சிக்குப் பின்னாலும் ஓர் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை உணர்ந்து, பக்தி முயற்சியை மேற்கொண்டால், கடவுளின் ஆசியைப் பெறலாம். அதே நேரத்தில் அர்த்தம் புரியாமல், கடமைக்காகவோ; அல்லது மற்றவரின் கவனத்தை ஈர்க்க அந்தப் பக்தி முயற்சியை மேற்கொண்டால், மனிதரிடமிருந்து பாராட்டைப் பெறலாமே ஒழிய, கடவுளின் ஆசியைப் பெற முடியாது.
யூதர்கள் ஆண்டுக்கொரு முறை பாவக் கழுவாய் நாளில் நோன்பிருந்தார்கள் (லேவி 16: 33). இன்னும் ஒருசில காரணங்களாக அவர்கள் நோன்பிருந்தார். ஆனால், அவர்கள் மெசியாவின் வருகைக்காகவே பெரும்பாலான நேரங்களில் நோன்பிருந்தார்கள். இவ்வாறு ஆண்டுக்கொரு முறை இஸ்ரயேல் மக்கள் நோன்பிருந்தபோது, பரிசேயர்கள் வாரத்திற்கு இரண்டு முறை நோன்பிருந்தார்கள் (லூக் 18: 12), இந்த இரண்டு நாள்களும் மக்கள் கூடி வந்தார்கள். அதனால் மக்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் நோன்பிருந்தார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், இன்றைய நற்செய்தியில் யோவானின் சீடர், இயேசுவிடம், “…உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்று கேட்கும்போது, அவர் அவர்களிடம், தன்னுடைய சீடர்கள் எப்போது நோன்பிருப்பார்கள் என்பதைப் பற்றித் தெளிவான விளக்கம் தருகின்றார். இயேசுவின் பதிலில் நோன்பினைக் கடமைக்காக அல்லாமல், அர்த்தம் உணர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தெளிவு இருக்கின்றது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், வறியோரின் தேவையைப் பூர்த்தி செய்வதும், விலங்குகளை உடைப்பதும், தேவையில் இருப்போருக்கு உதவி செய்வதும்தான் உண்மையான நோன்பு என்ற விளக்கத்தைத் தருகின்றது. இவ்வாறு ஒருவர் நோன்பிருந்தால், அவரது வேண்டுதல் கேட்கப்படும், அவரது ஒளி விடியல் போல் எழும்; நலமான வாழ்வு கிடைக்கும் என்கிறது.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 51 -ல் அதன் ஆசிரியர் தாவீது, “கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே” என்கிறார். உரியாவின் மனைவி பத்சேபாவோடு தாவீது பாவம் செய்தபிறகு (2 சாமு 11,12) தனது உணர்ந்து அவர் பாடும் பாடல், கடவுளின் மன்னிப்பை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது.
ஆதலால், நோன்பாக இருக்கட்டும்; வேறு எந்த பக்தி முயற்சியாக இருக்கட்டும். அதை நாம் மேம்போக்காய்ச் செய்யாமல், அர்த்தம் உணர்ந்து, ஆழ்ந்த அன்புடன் செய்து, கடவுள் அளிக்கும் ஆசிகளைப் பெறுவோம்.
இயேசு வெறும் இறைவாக்கினர்; கடவுள்
கொல்கொத்தா நகரின் ஒரு சந்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் புண்ணாய் இருந்த ஒருவரின் உடலிலிருந்து வழிந்து கொண்டிருந்த சீழினினைத் துடைத்து, அதில் மருந்து தடவிக் கொண்டிருந்தார் புனித தெரசா.
அதைப் பார்த்துவிட்டு ஓர் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த போதகர், “இத்தனை நாள்களும் இயேசு வெறும் இறைவாக்கினர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள் செய்யும் இச்செயலைப் பார்க்கும்போது, இயேசு வெறும் இறைவாக்கினர் அல்ல; அவர் கடவுள் என்பது தெளிவாகத் தெரிகின்றது” என்று நெஞ்சுருகிப் பேசினார்.
நாம் செய்யும் இரக்கச் செயல்களையும், அன்புச் செயல்களையும் பார்த்துவிட்டு மற்றவர் கடவுளைப் போற்றிப் புகழவேண்டும். அதுவே உண்மையான சமய வாழ்வு. தெரசா உண்மையான சமய வாழ்விற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார். நாம் எப்போது உண்மையான சமய வாழ்விற்கு எடுத்துக் காட்டாய் விளங்கிப் போகிறோம்? சிந்திப்போம்.
Comments are closed.