பிப்ரவரி 4 : நற்செய்தி வாசகம்
பல்வேறு பிணிகளால் வருந்தியவரை இயேசு குணப்படுத்தினார்.
பல்வேறு பிணிகளால் வருந்தியவரை இயேசு குணப்படுத்தினார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39
இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————————
நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்வோம்
பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
I யோபு 7: 1-4, 6-7
II 1 கொரிந்தியர் 9: 16-19, 22-23
III மாற்கு 1: 29-39
நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்வோம்
நிகழ்வு
கடலில் பயணம் செய்துகொண்டிந்த பெரிய கப்பல் ஒன்று, திடீரென்று வீசிய பெரும்புயலில் சிக்கிச் சின்னாபின்னமானது. இதனால் கப்பலில் பயணம் செய்த பலர் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தார்கள். ஒருசிலர் மீன்களுக்கு இரையானார்கள். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் மட்டும் எப்படியோ தப்பித்து அருகில் இருந்த தீவில் ஒதுங்கினார். தீவில் இருந்தவர்களோ பழங்குடி மக்கள்; ஆனாலும் அவர்கள் அவரை நல்லமுறையில் உபசரித்தார்கள். பின்னர் அவர் அவர்களோடு பேசும்பொழுதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று.
இது தெரிந்ததும் அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். மதம் என்பது போதை என்பதும், மூட நம்பிக்கைகளின் மொத்த வடிவம் என்பதும், அது உங்களைக் சோம்பேறிகளாக்கிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?” என்று கூறினார். அதற்கு அந்தப் பழங்குடி மக்களின் தலைவர் அவர்களிடம், “ஐயா! நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்கு விளங்கவில்லை; ஆனால், ஒன்று மட்டும் உறுதி. ஒருகாலத்தில் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாக இருந்த எங்களுக்கு இங்கு வந்த அருள்பணியாளர் ஒருவர் தம் உயிரைப் பணயம் வைத்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, எங்களை நல்லவராக்கினார். ஒருவேளை அவர் மட்டும் இங்கு வராமலும், நற்செய்தி அறிவிக்காமலும் இருந்திருந்தால், நாங்கள் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாகவே இருந்திருப்போம். நீங்களும் இந்நேரம் வரைக்கும் இங்கு உயிரோடு இருந்திருக்க மாட்டீர்கள்” என்றார்.
ஆம். யாரோ ஓர் அருள்பணியாளர் தம் உயிரையும் பணயம் வைத்து நற்செய்தி அறிவித்ததால்தான், தீவில் இருந்த மனிதமாமிசம் சாப்பிடுபவர்கள் நல்லவர்களாக மாற முடிந்தது. பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நற்செய்திக்காக யாவற்றையும் அல்லது எல்லாவற்றையும் செய்வோம் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஊர்கள் தோறும் நற்செய்தி அறிவித்த இயேசு:
மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் பணிவாழ்வில் ஒருநாள் எப்படி இருந்தது என்பதை எடுத்துச் சொல்கின்றது. இதில் குறிப்பாக நாம் கவனிக்கவேண்டியது, இயேசு தன் சீடர்களிடம் சொல்கின்ற, “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்றவேண்டும். ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்” என்ற வார்த்தைகளாகும். திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின் (மாற் 1: 14) நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கி இயேசு, ஊர்கள் தோறும் நற்செய்தி அறிவித்தார். மட்டுமல்லாமல், “நற்செய்தி அறிவிப்பதற்காகவே வந்திருக்கின்றேன்” என்கின்றார்.
இயேசு ஏன் தன் சீடர்களிடம் இவ்வாறு சொல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்குப் பதிலாய் இருப்பதுதான் இன்றைய முதல் வாசகமும், இன்றைய நற்செய்தியின் முதற்பகுதியும் ஆகும். முதல் வாசகத்தில் யோபு தனது பிள்ளைகள், உடைமைகள் யாவற்றையும் இழந்தபின்பு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவராய் தன் நாள்கள் எப்படி வேதனையோடு கழிகின்றன என்பதைப் பற்றிப் பேசுகின்றார். யோபுவைப் போன்று மனத்தளவிலும், இன்றைய நற்செய்தியில் வருகின்ற பலவிதமான நோயாளர்களைப் போன்று உடலளவிலும் பலரும் இன்றைக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு ஆறுதலையும், உடல் உள்ள நலனையும் அளிக்க இயேசு ஊர்கள்தோறும் நற்செய்தி அறிவித்தார்.
Comments are closed.