இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 02.02.2024

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்பிடி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய்.” என தாவீது, சாலமோனிடம் கூறுகிறார்.

நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்கு முறைகளை அனைத்தையும் செவ்வனே கடைபிடிக்க வேண்டும் என்ற உண்மையை நாம் உணர்ந்து செயல்பட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.” என வாசித்தோம்.

நம் ஆண்டவர் திருமுழுக்கு பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் கூட தீய ஆவிகளின் மீதுள்ள அதிகாரத்தை அளித்துள்ளார் என்பதை உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் “உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.” என வாசித்தோம்.

ஆலயத்தில் மந்திரிக்கப்பட்ட தூய எண்ணெய் நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கவல்லது என முழுமையாக விசுவசிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

பிறந்த இப்புதிய பிப்ரவரி மாதம் முழுவதும் நம் ஆண்டவர் நம்மை ஆசீர்வாதங்களால் நிரப்பிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.