னவரி 27 : நற்செய்தி வாசகம்

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ‘‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், ‘‘போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ‘‘இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, ‘‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————–

“சாகப் போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?”

பொதுக்காலத்தின் மூன்றாம் வாரம் சனிக்கிழமை

I 2சாமுவேல் 12:1-7a, 10b-17

II மாற்கு 4:35-41

“சாகப் போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?”

பாவமும் சாவும்:

ஒரு சிற்றூரில் இருந்த இளைஞன் ஒருவன் பாம்பு ஒன்றை வளர்த்து வந்தான். அது விஷப் பாம்பாக இருந்தாலும், அவன் அதைத் தன் பிள்ளையை போன்று நினைத்து, அதற்கு உணவூட்டினான்; பராமரித்தான். அதனுடன் நீண்ட நேரம் செலவழித்தான். பாம்பும் அவன் விசில் சத்தம் எழுப்புகின்றபோதெல்லாம் அவனிடம் வந்து, அவன் சொன்னதையெல்லாம் கேட்டு நடந்தது. இதனால் அவன் தான் வளர்த்து வந்த அந்தப் பாம்பைக் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான்.

ஒருநாள் அவன் தான் வளர்ந்து வந்த பாம்பைத் தன் நண்பர்களிடம் காட்டுவதற்காக அதை ஒரு சாக்குப் பையில் போட்டுக்கொண்டு, அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றான். நண்பர்கள் அவன் வளர்த்து வந்த பாம்பைப் பார்த்துவிட்டு, அது மிகவும் சாதுவாகவும், அவன் சொன்னதையெல்லாம் அது கேட்டு நடந்தது கண்டும் பெரிதும் வியந்து, அவனை மனதாரப் பாராட்டினார்கள்.

இத்தகைய மகிழ்ச்சியுடன் அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். வீட்டிற்கு வந்ததும், சாக்குப் பையிலிருந்து அவன் பாம்பை வெளியே எடுத்து விட்டான். அப்போது எதிரிபாராத விதமாக பாம்பு அவனைக் கொத்தி, அங்கிருந்து புதருக்குள் ஒளிந்துகொண்டது. இதனால் விஷம் தலைக்கேறி அவன் இறந்து போனான்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞன் விஷப்பாம்பு என்று தெரிந்தும் அதனோடு வாழ்ந்து வந்தான். இதனால் அவன் அந்தப் பாம்பினாலேயே கொத்தப்பட்டு இறந்துபோனான். பலரும் பாவம் என்று தெரிந்தும், அதைச் செய்கின்றார்கள். அதனோடு வாழ்கின்றார்கள். முடிவில் அவர்கள் பெரிய அழிவைச் சந்திக்கின்றார்கள். முதல் வாசகத்தில் தாவீது உரியாவின் மனைவியோடு பாவம் செய்ததால் என்ன நடக்கின்றது என்பது பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

முதலில் பத்சேபாவோடு பாவம் செய்யும் தாவீது, அந்தத் தவற்றை மறைக்க உரியாவைக் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்து, அவரைக் கொன்று போடுகின்றார். இவ்வாறு தாவீது விபசாரம், கொலை ஆகிய பாவம் செய்தது மட்டுமல்லாமல், ஆண்டவருடைய கட்டளையை மீறி அவருக்கு எதிராகவும் பாவம் செய்கின்றார்.

இந்நிலையில் இறைவாக்கினர் நாத்தான் தாவீதின் தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். இறைவாக்கினர் நாத்தான் தனது தவற்றைச் சுட்டிக்காட்டியதும் தாவீது, நான் பாவமே செய்ய இல்லை என்று தன்னை நியாயப்படுத்தாமல் ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்கின்றார்; ஆண்டவரும் அவரது குற்றத்தை மன்னிக்கின்றார். இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் தாவீது உரியாவின் இறப்புக்குக் காரணமாக இருந்தால், பத்சேபாவிற்கும் அவருக்கும் பிறந்த குழந்தை இறக்கின்றது. மேலும் அவரது மகன்களான அம்னோன், அப்சலோம், அதோனியா கொடூரமாகக் கொல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தாவீது செய்த பாவம் இவர்களுடைய கொடிய இறப்புக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

Comments are closed.